நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும் இடிக்கப்படும்... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை : நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.
நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டப்படுவதால் இந்த கட்டுமானத்துக்கு தடை விதிக்கக்கோரி எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் இந்த ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடைபாதை கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கபட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர்நீலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலாக இருந்தாலும் விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றாலும் அவை இயற்கை வளங்களையும், நீர் வளங்களையும் ஒட்டு மொத்தமாக பாதிப்பதாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சார்ந்தது? நடைபாதை கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு மற்றும் தென்னக ரயில்வே 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu