'நீட்' தேர்வுப் பிரச்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட்தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசின் இரட்டை நிலையை சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சம்பவங்களைத் தொகுத்து விளக்கமளித்தார்
சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து முதலமைச்சர் பேசியது:
நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்தான். ஏன், மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள்கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன் முதலில் நடத்தப்பட்டது. 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான்.
நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான். அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான். இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான்.
ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சி.ஏ.ஏ. மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போடவேண்டும் என்ற நிலை வந்தபோது, பா.ஜ.க. கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்குத் தர வேண்டுமென்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அ.தி.மு.க.- விற்கு இல்லை. அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும்.
ஆனால், நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சிநடத்தியதுதான் அ.தி.மு.க. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான்அறிமுகப்படுத்த விருக்கிறேன்.
ஆகவே, நீட் தேர்வை இரத்து செய்து, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன குற்றச்சாட்டிற்குப் பதிலாக இந்த அவையில் சொல்லி அமைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu