சட்டப்படிப்பு தொலைதுாரக் கல்வி மூலம் நடத்த அண்ணாமலை பல்கலைக்கு விதித்த தடை நீட்டிப்பு : சென்னை ஐகோர்ட் உத்தரவு
அண்ணாமலை பல்கலைக்கழகம் (பைல் படம்)
அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதுாரக் கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப் படிப்புகளை நடத்தி வருவதற்குத் தடை கோரி திருச்செந்துாரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதுாரக் கல்வி மூலம் சட்டப் படிப்பை நடத்தப்படுவதாக மனுவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தொலைதுாரக் கல்வி மூலம் சட்டப் படிப்பை வழங்கத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்திய பார் கவுன்சில் தரப்பில், தொலைதுாரக் கல்வியில் சட்டப் படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், இந்தியா முழுவதும் 1,600 சட்டக் கல்லுாரிகள் இயங்குவதாக பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைக் கேட்ட தலைமை நீதிபதி, இந்தக் கல்லுாரிகளில் போதுமான தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா? எனக் கேட்டார்.
தொலைதுாரக் கல்வி மூலம் சட்டப் படிப்பு வழங்கப்படுகிறா? என்பதைத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியம் என இந்திய பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், தொலைதுாரக் கல்வி மூலம் சட்டப் படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu