சட்டவிரோதமாக 3வது நபர்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்தல்: அறிக்கை தாக்கல் செய்ய பதிவுத்துறை தலைவருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர் நீதி மன்றம் (பைல் படம்)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்காவில் உள்ள செட்டிக்குப்பம் என்னும் கிராமத்தில் உள்ள தனது சொத்து, வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமான விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்ய மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரியும், நில உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், சொத்துகளின் உண்மையான உரிமையாளர்கள் தவிர, மூன்றாம் நபர்கள் எவரேனும் மோசடியாக சொத்துகளைத் தங்கள் பெயரில் பதிவு செய்யவில்லை என்பதை உறுதி செய்ய, உரிய நடைமுறைகளை பதிவுத்துறை ஏற்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.
பதிவுத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,ஐகோர்ட் உத்தரவின்படி, விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தையே அணுக முடியும் எனவும், சொத்துகள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் முந்தைய வில்லங்கத்தைச் சரிபார்க்கும் வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில், சொத்துகள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவு செய்வதைத் தடுப்பதற்கான வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூலை 5ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu