கோவில் நில விபரங்களை சர்வே எண்ணுடன் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 39,000 கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை முறையாக குத்தகைக்கு விடாமல் அப்படியே விட்டதால் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்தனர். இந்த நிலங்களை மீட்க தற்போதைய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 1985-1987 ஆண்டின் அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கோயில்களுக்கு 5.25 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2018-2019 மற்றும் 2019-2020 கொள்கை விளக்க குறிப்பில் 4.78 லட்சம் நிலம் தான் உள்ளதாக கூறப்பட்டுள்ளது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கடந்த 1985-87ம் ஆண்டு, 2018-20ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பில் கூறியுள்ள நில விவரங்களை சர்வே எண்ணுடன், பதில் மனுவாக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இந்நிலையில், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கொள்கை விளக்க குறிப்பில் உள்ள நிலங்களின் விவரங்களை சர்வே எண்ணுடன் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் இணைந்து இந்த நிலங்களை கண்டறிந்து அது தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் ஆணையர் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு ஆணையர் அலுவலகத்தில் உள்ள 1 முதல் 15 பதிவேடுகளில் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், ஆவண காப்பகத்தில் உள்ள இனாம் பதிவு ஆவணங்கள் வாயிலாகவும், ஸ்டார் 2.0 மென்பொருளில் வில்லங்க சான்று பதிவு செய்து அதன் மூலமாக கண்டறியும் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu