கோயில்களை வைத்து பாஜக. அரசியல் செய்ய வேண்டாம் : அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
பைல் படம்
கோயில்களை வைத்து பாஜக. அரசியல் செய்ய வேண்டாம் எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணியும் ஆட்சி அல்ல திமுக, மக்கள் கோரிக்கையை ஏற்றே கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதாக பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது: அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கோயில்களில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் பொதுமக்கள் கூட்டமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூழ்நிலைக்கேற்ப சுவாமிக்கு ஆரத்தி காட்டுவது, பிரசாதம் வழங்குவது குறித்து கோயில் நிர்வாகங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் குடமுழக்கு நடத்துவது குறித்து ஏற்கெனவே முதலமைச்சர் ஆய்வு நடத்தி உள்ளார். விரைவில் இதுதொடர்பாக முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார்.
அனைத்து மதத்தினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், வழிபாட்டு தலங்கள் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சரை அனைத்து மதத்தினரும் பாராட்டி வருகின்றனர். கோயில்களைத் திறக்க பாரதிய ஜனதா கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அக்கட்சி கூறுவது தவறு. கோயில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது. மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது. கனிந்த கனியை தடியால் அடித்து விழ வைப்பது போல் இருக்கிறது பாஜகவினரின் கூற்று. கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்குதான் அழுத்தம் தேவைப்படும். உரியமுறையில் ஆய்வு கூட்டம் நடத்திய பிறகே கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அழுத்ததிற்கு அடிபணியும் ஆட்சி கிடையாது . மக்களுக்கு அழுத்தம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களில், கோயில் வருவாயில் செல்லும் சம்பளம் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டும் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்றார் அமைச்சர் சேகர்பாபு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu