கொரோனா கால கட்டத்திலும் சென்னை விமானநிலையம் ஏற்றுமதி, இறக்குமதியில் புதிய சாதனை
சென்னை விமானநிலையம் கொரோனா காலகட்டத்திலும் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை அதிக அளவு கையாள்கிறது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு காலத்திலும் சென்னை விமானநிலைய சரக்ககம் கடந்த ஆண்டைவிட,இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் அதிகளவு சரக்குகளான 1,67,420 மெட்ரிக் டன்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
கொரோனா வைரஸ் முதல் அலை,இரண்டாம் அலை என்று உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
இதனால் இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சா்வதேச விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.பயணிகள் விமான சேவைகள் முடங்கியுள்ள போதிலும்,சரக்கு விமான சேவைகள் தடையின்றி நடக்கின்றன.
சென்னை விமானநிலையத்தை பொறுத்தமட்டிலும் சா்வதேச விமானநிலையத்தில் பயணிகள் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது.
உள்நாட்டு விமானநிலையத்தில் குறைந்த அளவு பயணிகளுடன் குறைவான விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இரண்டாம் அலை ஓயத்தொடங்கியுள்ள நிலையில் தற்போது உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் சேவைகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சென்னை விமானநிலையத்தில் பயணிகள் சேவைப்பகுதி,கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு ஓய்ந்த நிலையில் உள்ளது.ஆனால் சென்னை விமானநிலைய சரக்ககப்பகுதி ஓய்வே இல்லாமல் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
சென்னை விமானநிலைய சரக்ககப்பிரிவில் வெளிநாடுகளிலிருந்து வழக்கமாக இறக்குமதியாகும் பொருட்களுடன்,மருத்துவ பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
குறிப்பாக ஆக்சிஜன் செறியூட்டிகள்,சிலிண்டா்கள்,வெண்டிலேட்டா்கள்,தொ்மல் ஸ்கேனா்கள்,மாஸ்க்குகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பெருமளவு இறக்குமதியாகுகின்றன.
அதோடு வழக்கமாக வரும் கம்யூட்டா் மற்றும் இயந்திரங்களுக்கான உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள்,அச்சு தொழிலுக்கான மூலப்பொருட்கள்,ரசாயன கலவைகள், உயிா்காக்கும் மருந்துகள்,முறையான அனுமதியுடன் தங்கக்கட்டிகள் போன்றவைகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
வெளிநாடுகளிலிருந்து இந்த பொருட்களை சென்னைக்கு கொண்டு வருவதில் வெளிநாட்டு விமானங்கள் மட்டுமின்றி, நமது இந்திய விமானப்படை விமானங்களும் ஈடுப்பட்டுள்ளன.
அதைப்போல் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகள்,பதப்படுத்தப்பட்ட தோல் பொருட்கள்,மீன்,நண்டு,காய்கறிகள்,பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள்,மலா்கள்,தாவர வகைகளும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதோடு மேற்குவங்கம்,அந்தமான் போன்ற இடங்களிலிருந்து பொருட்களை உள்நாட்டு விமானங்களில் சென்னைக்கு கொண்டு வந்து,இங்கிருந்து சரக்கு விமானங்களில் இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கும் பெருமளவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனால் சென்னை விமானநிலையத்தின் சரக்ககப்பகுதியில் ஏற்றுமதி,இறக்குமதி ஆகிய இரு பிரிவுகளிலும் ஓய்வின்றி பணிகள் நடக்கின்றன.
இதையடுத்து சென்னை விமானநிலைய சரக்ககம் ஏற்றுமதி,இறக்குமதியில் புதிய சாதணை படைத்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடிய நிலையிலும்,இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் சென்னை விமானநிலைய சரக்ககம் 1,67,420 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு இந்தியாவில் சிறந்த சரக்ககமாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 20% அதிகம் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.
அதிலும் முதல் ஆறு மாதங்களின் கடைசி 3 மாதங்களில் ஏற்றுமதி,இறக்குமதி பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேநிலை நீடித்தால்,வரும் 6 மாதங்களில் ஏற்றுமதி,இறக்குமதி மேலும் அதிகரித்து,இந்திய அளவில் சென்னை விமானநிலைய சரக்ககம் சாதணை படைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu