ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
அமைச்சர் தங்கம் தென்னரசு.
மிக்ஜாம் நிவாரண நிதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஏன் ரேஷன் கடை வாயிலாக நிவாரண நிதி வழங்கப்படுகிறது என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
ஒரே நாளில் 73 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
இந்நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும்.அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிவாரண நிதியானது ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.
ஆனால் ரேஷன் கடை மூலம் ரொக்கமாக நிவாரண நிதியை விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதில், ரேஷன் கடை மூலம் ரொக்கமாக நிவாரணம் வழங்கப்பட்டால் அதில் அதிக அளவு முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சென்று சேராது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டபோது இதே பிரச்னைதான் எழுந்தது. வங்கியில் ஜீரோ பேலன்ஸ் மெயின்டெயின் செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இந்த வங்கி கணக்கில் அரசு பணம் செலுத்தும் போது உடனடியாக அந்த வங்கிகள் அபராத தொகையை பிடித்தம் செய்துவிடுகிறது. நாங்கள் எச்சரிக்கை விடுத்தும், பணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்த முறை அது போன்று நடக்காமல் இருக்க ரொக்கமாக நிவாரணம் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முழுமையாக சென்று சேரவேண்டும் என்பதே நோக்கம் ஆகும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu