/* */

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
X

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி வழக்கின் விசாரணையை மக்களவை தேர்தலுக்கு பிறகு தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். மனுதாரர் ஹென்றி திபேன், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தற்போது வரை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அறிக்கை தயாராகி விட்டதாகவும், அடுத்த விசாரணையில் சமர்பிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Updated On: 27 March 2024 2:43 PM GMT

Related News