ரேசன் கடைகளில் காஸ் சிலிண்டர் வினியோகம்:பாதுகாப்பு நடைமுறை சாத்தியமா?
ரேசன் கடைகளில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தில், பாதுகாப்பு நடைமுறைகளை கையாளுவது சாத்தியமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியன் ஆயில் (பொதுத்துறை) நிறுவனம் வாயிலாக, வீடுகளுக்கு 14 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது.. வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ சமையல் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது. சிலிண்டர் இணைப்பு பெற காஸ் ஏஜன்ஸி நிறவனங்களுக்கு,ஆதார் எண், முகவரி சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை, சான்றாக வழங்குவது அவசியம்.
இதில், பணி காரணமாக இடம்பெயரும் தொழிலாளர்கள்,கல்வி நிறுவனங்களில் படிக்க, தனியாக விடுதிகளில் தங்கியிருப்போரும் சிலிண்டர் இணைப்பு பெற, முறையான சான்றுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக, முகவரி சான்று கிடைக்காமல் தடுமாற்றமடைகினறனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, சில பகுதிகளில் உள்ள காஸ் ஏஜன்ஸி நிறுவனங்களில், 5கிலோ எடையில், சமையல் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதற்கு முகவரி சான்று அவசியமில்லை. ஏதேனும் ஒரு அடையாள சான்று வழங்கினால் போதுமானது. முதல் தடவை சிலிண்டர் வாங்கும்போது மட்டும் டிபாசிட் செலுத்த வேண்டும். சிலிண்டர் காலியானால், மீண்டும் காஸ் விலையை மட்டும் செலுத்தி, சிலிண்டர் பெறலாம்.
ரேசன் கடைகளில், 5 கிலோ சிலிண்டர் வினியோகம்:இதே போல், ரேஷன் கடைகளிலும், 5 கிலோ சிலிண்டர் வினியோக திட்டத்தை, செய,ல்படுத்த தமிழக அரசின் கூட்டுறவு பொது வினியோக திட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் பொதுத்துறை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது; தொடர்ந்து, தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுக்கும் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதுபற்றிய உத்தரவு கடிதம், கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பபட்டுள்ளது. இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, 5 கிலோ சிலிண்டர் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறையில் உள்ள சிக்கல்:ரேஷன் கடைகளில், 5 கிலோ சிலிண்டர் வழங்குவது, மக்களுக்கு பெரிய அளவில் பயனை ஏற்படுத்தும். ஆயிரம் ரூபாயை சிலிண்டர் விலை கடந்துவிட்டதால், சிலிண்டர் காலியானால், பதிவு செய்து திரும்ப சிலிண்டர் பெற, நடுத்தர, மற்றும் வசதியற்ற மக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, 5 கிலோ சிலி்ண்டர் இல்லத்தரசிகளுக்கு பெரிய உதவியாக அமையும்.
ஆனால், பல நகரங்களில் குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரில், குடியிருப்பு பகுதியில், நெருக்கமான கட்டிடங்களுக்கு மத்தியில், குறுகலான இடங்களில் ரேஷன் கடைகள் உள்ளன. பல இடங்களில், குறைந்த இடமுள்ள வாடகை அறைகளில் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. அரிசி, கோதுமை மூட்டைகள் அடுக்கியுள்ள அறைகளில், ரேஷன் பொருட்களை வைக்கவே இடமில்லாத இடங்களில், காஸ் சிலிண்டர்களை இருப்பு வைத்து கொள்வதும்,பாதுகாப்பாக கையாளுவது சிரமம் என்ற குழப்பத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.
.ரேசன் கடைகளில் காஸ் சிலிண்டர் வினியோகத்தை கொண்டு வருவது மிக சிறந்த திட்டமாக இருப்பினும், பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கேற்ப வழிமுறைகளை வகுப்பது மிக முக்கியமாகும்.தேவையான முன்னெச்சரிக்கை விதிமுறைகளுடன், இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu