திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).
தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என ஏப்ரல் 17ம் தேதி விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாட்களில் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என்றும் விதி உள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி, இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில், திமுக சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகவும், திமுக'வின் இந்த தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பதாகக் கூறி, அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், திமுக விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் ஆறு நாட்கள் வரை கால தாமதம் செய்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றும், திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவுகளை ரத்து செய்து, விளம்பரங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தேர்தல் விளம்பரங்கள் தொடர்பாக விதிமுறைகளை வகுத்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டுள்ளது. அந்த விதிமுறைகளை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ விளம்பரங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, விளம்பரத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
மேலும், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்து மாநில அளவிலான குழுக்களின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், இந்த உத்தரவு அவ்வப்போதைக்கு நீட்டிக்கப்பட்டு வந்ததாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் குறிப்பிட்டார். அதற்கு திமுக தரப்பில், 2004ம் ஆண்டு தேர்தலுக்கு மட்டும் தான் எனவும் இந்த விதிகளின் மூலம் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, 2023ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து 10 மாதங்களுக்கு பிறகே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், விளம்பரங்க்ளுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும் என்ற விதி முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu