சென்னையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை பார்ப்பதற்காக சென்ற மாணவன் உயிரிழப்பு
சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் ரிசல்ட்டை பார்க்கும் முன்பே விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
தமிழகத்தில் இன்று எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகதில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் இணைய முகவரிக்கும் அவர்களது தேர்ச்சி பற்றிய நிலை மதிப்பெண் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேருவது தொடர்பாக முடிவெடுப்பதற்காக தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்றனர்.
அந்த வகையில் சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மதுரவாயல் பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது லாரி மோதியது.
இந்த விபத்தில் மாணவன் ஜீவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு தப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்ட்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu