திமுகவிடம் அதிமுக சரணடைந்து விட்டது: நாம்தமிழர் சீமான் விமர்சனம்

திமுகவிடம்  அதிமுக சரணடைந்து விட்டது: நாம்தமிழர் சீமான் விமர்சனம்
X
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தவித குறையையும் அதிமுக சுட்டி காட்டவில்லை. திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது

திமுகவிடம் சரணடைந்து விட்டது அதிமுக என்றார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து எந்தவித குறையையும் அதிமுக சுட்டி காட்டவில்லை என்றும் திமுகவின் கிளைக் கழகமாக அதிமுக சரணடைந்து விட்டது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் பனை சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் பனை கிழங்கு, பனை விதை, பனை வெல்லம், பனை பவுடர், வீட்டு உபயோக பனை பொருட்கள் மற்றும் உண்ணக்கூடிய பனை பொருட்கள் என பல்வேறு விதமான பனை பொருட்கள் காட்சி படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ரத்த தான முகாமும் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பனைச் சந்தையினை பார்வையிட்டார். பின்னர் சீமான் பேசியதாவது: ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வதற்கு சசிகலாவை தவிர வேறு யாருக்கு உரிமை உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க வந்தால் நன்றாக இருக்கும். அதிமுக கட்சி நிர்வாகிகளுக்குள்ளயே ஓர் எண்ணம் வந்துவிட்டது. அதனால் சசிகலா தொண்டர்களை சந்தி்த்து வருகிறார்.

அதிமுக கட்சி தொடங்கி 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்திருப்பது எல்லாம் பண கொழுப்புதான். எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழாவை நூறு நாள் கொண்டாடியவர்கள் இவர்கள். பணம் இருந்தால் எவ்வளவு சிறப்பாக வேண்டுமானாலும் கொண்டாடலாம்.

திமுக அதிமுக நிர்வாகிகள் வைத்துள்ள மது ஆலைகளில் இருந்து தான், தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகளுக்கு சரக்கு வருகிறது. சாராய தொழிற்சாலைகளை அரசே வைத்திருப்பதால்தான் பனமரக்கள்ளை தடை செய்து விட்டு சாராயத்தை புனித தீர்த்தம் போல் விற்று வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பனமரக் கள்ளை தமிழ் தேசிய பானமாக அறிவிப்போம் .தமிழன் இந்துவே இல்லை.நாங்கள் தமிழர்கள் எங்கள் சமயம் வேறு நாங்கள் சைவர்கள், சிவசமயத்தை சார்ந்தவர்கள். சரித்திரபடி நாங்கள் இந்துகள் அல்ல. வெள்ளைக்காரன் போட்ட சட்டப்படி இந்துவாகி விட்டோம். அதை நான் ஏற்கவில்லை, எதிர்க்கிறேன் என்றார் சீமான்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்