அ.தி.மு.க.,வில் மீண்டும் தலைமை போட்டி?

அ.தி.மு.க.,வில் மீண்டும்  தலைமை போட்டி?
X
`நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட்க்கு பிறகு அ.தி.மு.க-வில் தலைமைக்கான போட்டி மீண்டும் ஏற்படும்.

இப்படி கிளம்பும் செய்தி பா.ஜ.க-வின் அஜண்டாக்களின் ஒன்று.’ என்கிறார்கள் அரசியல் ரகசியம் அறிந்தவர்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ரிசல்ட் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகி விடும். ரிசல்டை மையமாக வைத்து அனைத்து கட்சியினருக்கு ஜுரம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், அ.தி.மு.க-வுக்குள் மட்டும் தலைமைக்கான போட்டி ஏற்படும் என்று திகில் கிளம்புகிறது. சீனியரான செங்கோட்டையனும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் தலைமையை பெற காய் நகர்த்துவதாக நாள்தோறும் செய்திகள் கிளம்புகின்றன. ஆனால், ' இது தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் அஜண்டாக்களின் ஒன்று.' என்று வேலுமணி சமீபத்தில் விளக்கம் அளித்து வருகிறார். இருப்பினும் புகைச்சல் அடங்கியதாக தெரியவில்லை.

இதுதொடர்பாக முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். " தேர்தலுக்கு பிந்தைய அ.தி.மு.க எப்படி இருக்கும் என்பது தான் கட்சிக்குள் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இ.பி.எஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்ற செய்தி, கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அம்மா மறைவுக்கு பிறகு முதல்வர் ரேஸில் செங்கோட்டையனும் இருந்தார். ஆனால், எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி, இ.பி.எஸ் முதல்வராகி விட்டார். அதேபோல தற்போது கட்சிக்கு பொதுச் செயலாளராவும் மாறி விட்டார்.

இ.பி.எஸ் பொதுச் செயலாளரானதற்கு செங்கோட்டைனின் பக்க பலமும் இருந்தது உண்மை தான். ஆனால், அவரை தலைவராக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் செங்கோட்டையன் இல்லை. ஏனென்றால், இ.பி.எஸ் சிலுவம்பாளையத்தின் கிளைச் செயலாளராக இருந்த போது செங்கோட்டையன் கொங்கு ஏரியாவின் அ.தி.மு.க-வின் முகங்களில் ஒருவராக இருந்தார். அவர் எப்படி இ.பி.எஸ்-ஸை தலைவராக ஏற்றுக் கொள்ளுவார்.

செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியான போது, இதுகுறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக செங்கோட்டையன் பேட்டி கொடுத்தார். அப்போதுக்கூட, 'அ.தி.மு.க தொண்டர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கத்துக்கு நான் தூணாக நின்று பணியாற்றுவேன்' என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால், 'இ.பி.எஸ் குறித்தோ, அவர்தான் கட்சியின் தலைவர்...' என்றோ ஒருவார்த்தைக்கூட சொல்லவில்லை. இதுதான் கட்சிக்குள் மேலும் புகைச்சலை அதிகரித்தது இருக்கிறது.

மறுபக்கம் வேலுமணி தனது செல்வாக்கால், கட்சிக்குள் பல இரண்டாம் கட்ட தலைவர்களை கைக்குள் வைத்திருக்கிறார். இ.பி.எஸ் பொதுச் செயலாளராவதற்கு வேலுமணியின் பங்கு மிக அதிகம். அதனால் தான் வேலுமணி தலைவராக ஆக முயல்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்த விவகாரம் வெளியான போதே அதுகுறித்து விளக்கம் கொடுத்திருக்கலாம். ஆனால், கிட்டதட்ட 10 நாள்கள் மெளனமாக இருந்து விட்டு, தற்போது தான் விளக்கமே கொடுக்கிறார்.

இ.பி.எஸ் மீது கட்சிக்காரர்களுக்கு இருக்கும் ஒருமித்த குற்றச்சாட்டு என்னவென்றால், ' பொதுச் செயலாளரான பின்னர் முக்கிய முடிவுகளை எடுக்க இ.பி.எஸ் தயங்குகிறார். கட்சிக்குள் களையெடுக்க பயப்படுகிறார் ' என்பதுதான். அதற்கு உயிரோட்டம் கொடுக்கும்விதமாக ' எடப்பாடி எந்த முடிவு எடுத்தாலும் எங்களை கேட்டுதான் எடுப்பார்' என்று வேலுமணி பேட்டியில் பேசியது கட்சிக்குள் புகைச்சலாக இருந்த விவகாரத்தை வெடிக்க செய்து இருக்கிறது.

இப்படி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், அதை நீடிக்க செய்துக் கொண்டே இருப்பதுதான், தற்போது பிரச்னையாகிக் கொண்டே செல்கிறது. உண்மையில், இ.பி.எஸ் இல்லாமல் வேலுமணி இல்லை. அதேபோல தான், வேலுமணி இல்லாமல் இ.பி.எஸ் இல்லை. தற்போது இ.பி.எஸ் என்னும் பிராண்ட் அ.தி.மு.க-வுக்கு தேவைப்படுகிறது. எனவேதான் அதை உடைக்க பா.ஜ.க-வும், தி.மு.க-வும் முயலுகிறது. தி.மு.க-வுக்கு பலவீனமான அ.தி.மு.க தேவைப்படுகிறது. ஆனால், பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி தேவைப்படுகிறது. எனவேதான், அதை உடைக்க கடுமையாக வேலை செய்கிறார்கள். அ.தி.மு.க இல்லையென்றால், இ.பி.எஸ்., வேலுமணி, செங்கோட்டையன் என யாருமே இல்லை. இது எல்லா சீனியர்களுக்கும் நன்றாகவே தெரியும். நாங்கள் அதை பாதுகாக்கவே போராடுகிறோம்.

ஆனால், இந்த தேர்தல் முழுக்க முழுக்க இ.பி.எஸ் கட்டுப்பாட்டில்தான் நடந்தது. இதில் ரிசல்ட் சரியாக அமையவில்லையென்றால், இ.பி.எஸ் முகத்துக்கு நேரே பல கைகள் உயரவும் வாய்ப்பு இருக்கிறது." என்றனர் விரிவாக. நெருப்பில்லாமல் புகையாது!

Tags

Next Story
Weight Loss Tips In Tamil