சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
X

சென்னை மெட்ரோ ரயில் (கோப்பு படம்)

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

கனமழையின் காரணமாக,சென்னை பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கனமழை நேரத்தில் சென்னை மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை அளிக்கும் வகையில் கூடுதலாக மெட்ரோ இரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ இரயில் சேவை:

  • காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).
  • காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
  • பச்சை வழித்தடத்தில் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
  • காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்
  • இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

கூடுதலாக மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

பச்சை வழித்தடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோவில் மாறி விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலையைப் பொறுத்து வழக்கமானசேவைக்கு மாற்றியமைக்கப்படும்.

முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ இரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை 15.10.2024 முதல் 17.10.2024 வரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். (தேவைப்பட்டால் வானிலை நிலையைப் பொறுத்து தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்). மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil