அறநிலையத்துறையில் சட்ட புறம்பான செயல்பாடுகள் மீது நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறையில் சட்ட புறம்பான செயல்பாடுகள்  மீது நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
X
Action on Illegal Activities in the Treasury - Minister Sekarbabu

இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிரான பல்வேறு குழுக்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்கின்றனர். அவர்கள்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எச்சரிக்கை.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (23.09.2021) சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பணிகள், திருத்தேர், திருக்குளங்கள், திருமண மண்டபங்கள், புதிய கல்லூரிகள், நலதிட்ட உதவிகள், பணியாளர் நியமனம் உட்பட பல்வேறு பணிகள் அடங்கும். இந்த அறிவிப்புகளை ஓராண்டுக்குள் செயல்படுத்துவதில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

முதற்கட்டமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டம் முடிவதற்குள் அறிக்கப்பட்ட அறிவிப்புகளில் முதல் அறிப்பான ஒரு கால பூஜைத்திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள் /பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.1000/- வழங்கும் திட்டத்தையும், அதனை தொடர்ந்து திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்கள்.

மேலும், அறிக்கப்பட்ட அறிவிப்புகளை மண்டல வாரியாக பிரித்து திட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். திருக்கோயில் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அறிக்கை சமர்பிக்கும்போது ஒரு முறைக்கு இருமுறை ஆராய்ந்து சட்ட வல்லுநர்களை கொண்டு நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை சிலநபர்கள் சில நாட்களுக்கு முன்பு பக்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அதேபோல் துறைக்கு எதிரான பல்வேறு குழுக்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் முதன் முறையாக முதல் அறிவிப்பினை செயல்படுத்தியது போல் அனைத்து அறிவிப்புகளையும் உரிய காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) இரா.கண்ணன் இ.ஆ.ப., திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள் உட்பட அலுவலர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story