சென்னை மாநகராட்சியில் 400 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் - ஆணையர் தகவல்

சென்னை மாநகராட்சியில் 400 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் - ஆணையர் தகவல்
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 400 காய்ச்சல் சிறப்பு முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஆணையர் கேட்டுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக, கடந்த 08.05.2020 முதல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு இரண்டு காய்ச்சல் முகாம்கள் என, 400 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த காய்ச்சல் முகாம்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகம் உள்ள இடங்கள் மற்றும் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ள இடங்களாக கருதப்படுகின்ற பகுதிகளில் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. இந்த காய்ச்சல் முகாமில் மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி அளவிலான கள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இந்த காய்ச்சல் முகாம்களை கண்காணித்து வருகின்றனர்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுபடுத்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முதன்மை செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!