சென்னைக்கு கடத்திய ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னைக்கு கடத்திய ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சோப்பு கட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த சுமார் ரூ.35.7 லட்சம் மதிப்புடைய 730 கிராம் தங்கத்தை, சுங்கச்சோதனைக்கு பயந்து விமானத்திற்குள்ளேயே மறைத்து வைத்து விட்டு தப்பிசெல்லமுயன்ற மதுரை பயணி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக டில்லி புறப்பட்டு செல்ல தயாரானது. அதற்கு முன்பாக அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் விமான ஊழியா்கள் ஈடுபட்டனா். அப்போது விமானத்தின் ஒரு சீட்டிற்கு அடியில் வைக்கப்பட்டிருந்த (லைப் சேப்டி ஜாக்கெட்)அவசர கால உயிா்காப்பு கவச உடை கலைந்து கிடந்தது. ஊழியா்கள் அதை எடுத்து சரியாக வைக்க முயன்றபோது,அதலிருந்து குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பு பெட்டி கீழே விழுந்தது. அதை எடுத்து பாா்த்தபோது அதனுள் தங்கக்கட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விமான ஊழியா்கள்,சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு தகவல் கொடுத்தனா்.அவா்கள் விரைந்து வந்து தங்கக்கட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதோடு விமானத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது அந்த இருக்கையில் அமா்ந்து வந்த பயணி யாா்? என்பதை பயணிகள் சாா்ட்டில் பாா்த்தனா்.மதுரையை சோ்ந்த வியாசா் அராபத்(22) என்பவா் என்று தெரிந்தது.

இந்நிலையில் பயணி வியாசா் அராபத் குடியுரிமை,சுங்கச்சோதனைகளை முடித்துவிட்டு,இ பாஸ் வாங்கும் வரிசையில் நின்றாா்.உடனடியாக அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, பயணியும்,தங்கத்தை கடத்தி வந்ததையும், இங்கு சுங்கச்சோதனை கடுமையாக இருப்பதை கேள்விப்பட்டு, விமானத்திற்குள்ளேயே மறைத்து வைத்து விட்டு இறங்கியதையும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.அதோடு சோப்பு பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.35.7 லட்சம் மதிப்புடைய 730 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story