வனவிலங்குகள் தாகம் தணிக்க காப்புக்காடுகளில் தண்ணீர் நிரப்பும் பணி
செங்கல்பட்டு வனச்சரகத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், சாலூர், ஒரகடம் ஆகிய பகுதிகள் உட்பட 15க்கும் மேற்பட்ட காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இந்த காப்புக் காடுகளில் வாழும் புள்ளிமான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக வனத்தில் அமைந்துள்ள இயற்கையான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுடன், வனத்துறை சார்பில் செயற்கையான தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடைக் காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வெயில் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு வனச் சரகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு வனச்சரகர் பாண்டுரங்கன் கூறும்போது, செங்கல்பட்டு வனச்சரகத்தில் கடும் வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியே செல்வதைத் தடுக்கும் வகையில் வனத்துறை அமைத்துள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக திருக்கழுக்குன்றம், சாலூர், ஒரகடம் ஆகிய மூன்று காப்புக்காடுகளில் உள்ள பெரிய தொட்டிகளிலும் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனவிலங்குகளின் தாகம் தணிக்க, கோடைக் காலம் முடியும் வரை அனைத்து காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெறும்'' என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu