செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்: கலெக்டர் பார்வை படுமா?
கிராம சாலையோர குழாயில் தண்ணீர் பிடிக்கும் காட்சி.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கீரப்பாக்கம் ஊராட்சி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல மாதங்களாக இங்கு குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாததால் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ஏதோ கொஞ்சநஞ்சம் கிடைக்கும் குடிநீரும், அடிக்கடி மோட்டார் பழுதாவதால் அதுவும் சில நேரங்களில் கிடைக்காமல் போகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளாமல் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி தொட்டி மாரியம்மன் கோவில் தெரு என்ற பகுதியில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக அங்குள்ள சுவிட்ச் போட்டபோது அப்பகுதியை சேர்ந்த அலமேலு என்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அப்போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு இதுவரை பொருத்தப்படவில்லை. இதில் சின்டெக்ஸ் தொட்டி இடமாற்றம் செய்வதற்காக அங்கன்வாடி மையம் அருகில் ஆரம்பிக்கப்பட்ட பணி கடந்த 8 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அங்குமிங்குமாக அலைந்து திரிகின்றனர்.
அதே பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள சுவிட்ச் பாக்ஸ் மற்றும் திறந்தவெளியில் கழட்டி விடப்பட்டுள்ள போர் மூலம் மின்சாரம் பாய்கிறது. இதனால் பொதுமக்கள் உயிர் பயத்தில் அச்சத்துடன் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதேபோல் சாலை, தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் குறித்தும் பலமுறை புகார் கூறியும் ஊராட்சி செயலர் கண்டுக்கொள்ளவில்லை.
பல இடங்களில் போர்வெல் மற்றும் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டும் பல ஆண்டுகளாகியும் இதுவரை பொதுமக்களின் பயண்பாட்டிற்கு வரவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சி செயலரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu