செங்கல்பட்டு: கருப்புபூஞ்சை நோய்க்கு அதிமுக மகளிரணி பிரமுகர் பலி!
கருப்பு பூஞ்சை வைரஸ்சின் குறுக்குவெட்டுத்தோற்றம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணகப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் பாரதி(வயது 53). இவா் அதிமுக திருப்போரூர் வடக்கு ஒன்றிய மகளிரணி தலைவர். இவருக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதையடுத்து திருப்போரூா் அருகே உள்ள அம்மாப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தாா். கடந்த வாரம் அவருக்கு முகம், கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. கண்ணின் நிறமும் மாறியது. இதையடுத்து அவருக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதியானது. ஆனால் அந்த மருத்துவமனையில் அந்த நோய்க்கு சிகிச்சைக்கான வசதி இல்லை.
இதையடுத்து பாரதியை மேல் சிகிச்சைக்காக கடந்த 31ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தாா். ஆனால் சிகிச்சை பலனின்றி பாரதி உயிரிழந்தாா். இதையடுத்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினா், பாரதி உடலை பெருங்குடியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்தனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த வாரம் மதுராந்தகம் அருகே உள்ள கிராமங்களை சோ்ந்த டாஸ்மாக் ஊழியா்கள் இருவா் கருப்பு பூஞ்சை நோய் அறுகுறிகளுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தை சோ்ந்த மற்றொரு பெண் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளாா்.இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கரும்பூஞ்சை நோயால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu