சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் சம்பவத்தில் 9 பேர் கைது
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பு மாணவர்கள் இருவரை கிழக்கு கடற்கரை சாலைக்கு கடத்தி சென்று கட்டிவைத்து தாக்கிய சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி விக்னேஷ்(18), அவரது அண்ணன் பழனிவேல், உடன் படிக்கும் நண்பன் நிஷாந்த் ஆகியோர் பி.காம் படித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் நிஷாந்த் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததால் அதே கல்லூரியில் படித்து வரும் ஜானி என்பவர் வாகனத்தை வேகமாக ஓட்டியதைக் கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் நிஷாந்த் உடன் படிக்ககூடிய சக்தி விக்னேஷ், பழனிவேலிடம் கூறியதை தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து ஜானியிடம் அடித்தது குறித்து கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜானியுடன் 10 மாணவர்கள் இருந்த நிலையில், நிஷாந்த் தரப்பில் மூன்று பேர் மட்டுமே இருந்த நிலையில் சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களும் தாக்கி கொண்டனர்.
பின்னர் மூவரையும் 10 பேர் கொண்ட ஜானி தரப்பு மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் சக்தி விக்னேஷ் மற்றும் அவரது சகோதரர் பழனிவேல் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் கடத்திய ஜானி தரப்பு, மாணவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ஷாலிமர் கார்டன் பகுதிக்கு அழைத்துச் சென்று கட்டிவைத்து அடித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பிய சகோதர்கள் இருவரும் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜானி மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், விக்னேஷ், லோகேஷ்வரன், ஜெகன்நாத் மற்றும் இரு இளஞ்சிறார் ஆகியோரை கைது செய்த போலீசார் எதிர்தரப்பான சகோதரர்கள் சக்தி விக்னேஷ், பழனிவேல் ஆகிய இரண்டு பேர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
பின்னர் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவர் இளஞ்சிறார் என்பதால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் விடுவிக்கப்பட்டதாக துரைப்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu