வீட்டுப்பாடம் செய்யவில்லை என தாய் திட்டியதால் 13 வயது சிறுவன் தற்கொலை

வீட்டுப்பாடம் செய்யவில்லை என தாய் திட்டியதால் 13 வயது சிறுவன் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட சிறுவன் தினேஷ்

வீட்டுப்பாடம் செய்யாததை தாய் கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சுண்ணாம்பு கொளத்தூரில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என தாய் திட்டியதால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர், எல்லையம்மன் கோவில் தெரு, மணிமேகலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (42), வெல்டிங் வேலை செய்து வருகிறார்.இவர் மனைவி,மகள் மற்றும் மகனுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்(13), மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், தினேஷ் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து சக நண்பர்களுடன் சேர்ந்து வெளியே விளையாடி முடித்து விட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது தாய் கமலா பள்ளியில் கொடுத்த வீட்டுப் பாடங்களை எழுதாமல் விளையாடி விட்டு வந்த தினேஷை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த தினேஷ் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவைத் உட்புறம் தாழிட்டு கொண்டார். கோபமாக சென்ற மகன் என்ன செய்கிறான் என்று பார்க்க அவரது தந்தை மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தினேஷ் ஊஞ்சல் கட்டி இருந்த சேலையில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தினேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு தினேஷை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸார் தினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுப்பாடம் செய்யாததை தாய் கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்