கவனத்தை திசை திருப்பி பணம் கொள்ளையடித்த 7 பேர் கொண்ட கும்பல் கைது

கவனத்தை திசை திருப்பி பணம் கொள்ளையடித்த  7 பேர் கொண்ட கும்பல் கைது
X

கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல்.

சென்னையில் கவனத்தை திசை திருப்பி பணம் கொள்ளையடித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சையத் தவுலத்(வயது78), கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60,000 ரூபாய், பணத்தை எடுத்து கொண்டு வந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ரூபாய் நோட்டு கீழே விழுந்ததாக கூறி, கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி சென்றதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி, காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகன எண்ணை வைத்து தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சென்ற போது, போரூர் ராமசந்திரா மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். மூன்று நாட்களாக மறைந்து இருந்து காத்திருந்த போலீசார் வாகனத்தை எடுக்க வந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில், அவரது கூட்டாளிகள் மாங்காட்டில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து உடனடியாக விரைந்த போலீசார் ஆறு பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு(46), ரமேஷ்(42), சுரேஷ்(37), முரளி(42), கிருஷ்ணன்(50), பாபு(45), கார்த்திக்(30), ஆகிய ஏழு பேர் என்பதும் பல்லாவரம், சங்கர்நகர், மாங்காடு, குன்றத்தூர், போன்ற பகுதிகளில் உள்ள தனியார் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து வரும் நபர்களை நோட்டமிட்டு பணத்தை சிதறவிட்டும், பூனை காஞ்சான் பொடியை தூவியும், கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டதை ஒப்புகொண்டனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம், நான்கு இருசக்கர வாகனங்கள், ஐந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story