கல்பாக்கத்தில் ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க கம்யூ. வலியுறுத்தல்

கல்பாக்கத்தில்  ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க கம்யூ. வலியுறுத்தல்
X
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தற்போதைக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:கொரோனா பெருந்தொற்று 2 வது அலை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மக்களின் உயிரை குடித்து வருகிறது . மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது . மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை நிலவுகிறது . நோயாளிகளில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ளது . தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மாநில அரசின் அனுமதியில்லாமல் வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது . இதனால் தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய வாய்ப்புள்ள தொழிற்சாலைகள் மற்றும் மத்திய , மாநில அரசுகளின் நிறுவனங்களில் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என கோருகிறோம் . குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் , கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் அணுசக்தி நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் . அதேபோல் மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டி தொழிற்பேட்டை வளாகங்களில் பல தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என தெரிகிறது . எனவே , மத்திய , மாநில அரசுகள் மேற்கண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை துவக்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் .இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story