மாநகராட்சி மேயர் மாற்றம் தொடர்கதையா? தொடர் தொல்லையா?

மாநகராட்சி மேயர் மாற்றம் தொடர்கதையா? தொடர் தொல்லையா?
X

ராஜினாமா செய்த கோவை மேயர் மற்றும்  திருநெல்வேலி மேயர்

தி.மு.க மேயர்களுக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்களே கொதித்தெழுவதும், அமைச்சர்கள் சமாதானம் பேசுவதுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 96 வார்டுகளைக் கைப்பற்றியது தி.மு.க. அப்போது கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சிபாரிசில் ‘கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்’ என்ற பெருமையுடன் பதவியேற்றார் கல்பனா. ஆனால், குறுகிய காலத்திலேயே அமைச்சர், அதிகாரிகளில் தொடங்கி பக்கத்து வீட்டுக்காரர் வரை அனைவரிடமும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதாக சர்ச்சையில் சிக்கினார் கல்பனா.

அவரது பதவிப் பறிப்புக்கான காரணங்கள் குறித்து கோவை மாநகராட்சி வட்டாரங்களில் விசாரித்தோம். கோவை மாநகராட்சி ஆணையர்களாக இருந்த ராஜகோபால் சுன்கரா, பிரதாப் ஆகியோரை, ‘நான் சொல்வதைக் கேட்காவிட்டால் உங்களை மாற்றிவிடுவேன்’ என மேயர் கல்பனா மிரட்டியதாகப் புகார் எழுந்தது. ‘ஸ்வீட்’ இல்லாமல் கோப்புகளில் கையெழுத்தும் போட மாட்டார். மேயரின் அரசு இல்லம் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் புதிய வீடு, பல பகுதிகளில் நிலங்கள், மூன்று எஸ்.யூ.வி கார்கள் வாங்கி விட்டார். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமாரின் ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் இருந்தது. இது குறித்த புகார்கள் கட்சித் தலைமை வரை செல்லவே, கல்பனாவைப் பலமுறை எச்சரித்தது தலைமை.

இந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் சரிவர தேர்தல் வேலை பார்க்கவில்லை என்ற புகார் எழுந்தது. அவரது 19-வது வார்டிலேயே தி.மு.க-வைவிட பா.ஜ.க அதிக வாக்குகள் வாங்கியது. இப்படியே விட்டால் 2026 தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள்.

55 வார்டுகளைக்கொண்ட நெல்லை மாநகராட்சியில், தி.மு.க-வைச் சேர்ந்த 44 கவுன்சிலர்கள் உள்ளனர். பாளையங்கோட்டை எம்.எல்.ஏ-வான அப்துல் வஹாப் ஆதரவில் மேயரானவர் சரவணன். ஆனால், பதவியேற்ற சில தினங்களிலேயே அப்துல் வஹாப்புடன் மோதத் தொடங்கினார் சரவணன். அதனால், வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் அனைவருமே மேயர் சரவணனுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், முரண்டு பிடித்தனர்.

கூடவே, மாநகராட்சி ஒப்பந்தங்களில் மேயருக்கு மட்டுமே அதிக பலன் கிடைப்பது கவுன்சிலர்களுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் மேயர்-கவுன்சிலர்கள் மோதலுக்கு முக்கியக் காரணமாகி விட்டது. இந்த மோதல் முற்றி, மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது. கடந்த 28-ம் தேதி நடந்த மாநகராட்சிக் கூட்டத்தையும் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

ஏற்கெனவே பலமுறை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் மேயரால் கவுன்சிலர்களை அனுசரித்துச் செல்ல இயலவில்லை. அதனால் வேறு வழியின்றி அவரை ராஜினாமா செய்ய கட்சித் தலைமை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்தே மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்து, மேயர் பொறுப்பைக் கைப்பற்ற இப்போதே பலரும் கோதாவில் இறங்கத் தயாராகி விட்டனர்.

நெல்லை, கோவை மாநகராட்சி களைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக, ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர’ கோரி தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் சுந்தர், துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் புகார் கொடுத்த தி.மு.க கவுன்சிலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனாலும் சமாதானமடையாத தி.மு.க கவுன்சிலர்கள் 20 பேர், “மேயரை மாற்றவில்லையென்றால், நாங்கள் ராஜினாமா செய்கிறோம்” என்று மாவட்டச் செயலாளரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக, 10 கவுன்சிலர்கள் ஆணையரிடம் கடிதமும் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து காஞ்சிபுரம் மாமன்ற தி.மு.க தலைவரான எம்.சங்கரிடம் கேட்டபோது, “நாங்கள் வாக்களித்துத்தான் மேயராகியிருக்கிறார் மகாலட்சுமி. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு தன்னிச்சையாகச் செயல்படுகிறார். மாவட்டச் செயலாளரிடம் இது குறித்து ஆறு முறை புகார் சொல்லிவிட்டோம். அவர் பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவும் மாறவில்லை. வார்டுக்கே எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கும்போது, நிலைக்குழுப் பதவியை வைத்துக்கொண்டு என்ன செய்வது.அதனால்தான் ராஜினாமா செய்துவிட்டோம்” என்றார் சுருக்கமாக. எனவே, அடுத்த விக்கெட் காஞ்சி மேயர்தான் என்று அறிவாலயத்தில் ‘டாக்’ ஓடுகிறது.

மதுரை மாநகராட்சியிலும் உட்கட்சி பிரச்னை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளரான இந்திராணி பொன்வசந்த், கவுன்சிலர்களை ‘மதிக்க’ தவறியதால் கடும் எதிர்ப்புக்குள்ளானார். பிரச்னை முற்றியதும் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, அமைச்சர் மூர்த்தியிடம் சரணடைந்து அவருடைய ஆதரவு கவுன்சிலர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். அ.தி.மு.க கவுன்சிலர்களையும் ‘கவனிக்க’ தொடங்கி விட்டாலும்கூட, பெரும்பாலான தி.மு.க கவுன்சிலர்கள் இன்னமும் மேயருக்கு எதிராகவே இருக்கிறார்கள்.

மேயரை மாற்றச் சொல்லி தலைமைக்குப் பக்கம் பக்கமாகப் புகார்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். சமீபத்தில் வணிகக் கட்டடங்களுக்கு விதிகளை மீறி அனுமதி அளித்த விவகாரம் வேறு மேயர் தரப்புக்கு எதிராக பூதாகரமாகிவருகிறது. அதனால், ‘மதுரையிலும் மேயர் மாற்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்!

“மேயர் தேர்வில் நேரடித் தேர்தலை ரத்து செய்ததும், முதன்முறை கவுன்சிலரானவர்களை யெல்லாம் மேயராக்கியதும் தான் பிரச்னையின் மூலம். அதை விட்டு விட்டு, மேயர்களை மாற்றத் தொடங்கினால், அடுத்தடுத்து எல்லா மாநகராட்சி களிலும் மேயர்களுக்கு எதிராகக் குரலை உயர்த்தத் தொடங்கி விடுவார்கள்” என்ற விமர்சனமும் எழத் தொடங்கியிருக்கிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil