முக்குலத்தோர் வாக்கு வங்கி: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

முக்குலத்தோர் வாக்கு வங்கி: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
X

எடப்பாடி பழனிச்சாமி

முக்குலத்தோர் வாக்கு வங்கி இல்லாமல் அதிமுக என்ற கட்சியே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது எடப்பாடி என்ன செய்யப்போகிறார்?

எடப்பாடி பழனிசாமி தன் ஆட்டத்தை துவங்கி விட்டார். இரண்டு முக்கிய முடிவுகளை தற்போது திடீரென எடுத்துள்ளாராம். அதை பற்றின தகவல்கள் தான் அரசியல் களத்தில் பரபரத்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, கிட்டத்தட்ட முழுக்கட்சியுமே தன்கையில் கொண்டு வந்து விட்டதாகவே தெரிகிறது.

தற்போது வந்துள்ள இந்த நீதிமன்ற தீர்ப்பானது, எடப்பாடியின் முழு வெற்றி கிடையாது, அது தற்காலிக வெற்றியே என்று டிடிவி தினகரன் போன்றோர் விமர்சித்து வருகிறார்கள். எனினும், இந்த நீதிமன்ற தீர்ப்பு சில சாதகங்களை எடப்பாடி பழனிசாமிக்கு பெற்று தரும் என்பதை மறுக்க முடியாது.. கட்சி யாரிடம் உள்ளது என்று குழம்பி உள்ள நிலையில், அதிமுக தொண்டர்களிடம் தற்சமயம் இந்த தீர்ப்பு, வரப்போகும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தர உதவக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது..

ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு பலம் அதிகமாக உள்ள நிலையில், இனிமேல் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும், மேலிடத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை அங்கீகாரங்களையும், இனி அதிமுகவுக்கே தர வேண்டிய நிர்ப்பந்தத்தையும் இந்த தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இவைகள் அனைத்துமே அதிமுக என்ற கட்சிக்கு பலம் என்றாலும், தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்க போகிறது என்பது தான் மிகப்பெரிய சந்தேகமாக கிளம்பி உள்ளது.

ஒரு தலைவரின் ஆளுமையை தீர்மானிப்பது, அவர் நேரடியாக எதிர்கொள்ளும் தேர்தல் முடிவுகள் தான் என்பதால், எடப்பாடியின் ஆளுமையும் இனி அடுத்தடுத்து நடக்க போகும் தேர்தல்களின் முடிவுகளில் தான் வெளிப்பட போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பலம் பொருந்திய திமுகவை சமாளித்து, விஸ்வரூப பாஜகவையும் பகைத்து கொள்ளாமல், எடப்பாடி மேற்கொள்ள போகும் அரசியல் இனிதான் அவருக்கு சவாலாக இருக்க போவதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கொங்குவில் பலத்தை கூட்டியுள்ள எடப்பாடியால், தென்மண்டலங்களில் இதுவரை தன் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவை எடப்பாடியால் முழுமையாக பெற முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. காரணம், வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் அதிகம் பாதிக்கப்பட்டது எம்பிசி பிரிவில் பெரும்பான்மையாக இருந்த முக்குலத்தோர் சமூகம் தான். இந்த அதிருப்தியில் இருந்து அவர்களால் 2 வருடங்களாகியும் வெளியே வரமுடியவில்லை.

அதுமட்டுமல்ல, தேவர் ஜெயந்தி விழாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புறக்கணித்ததையும் அவர்கள் இன்னமும் மறக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டு ஓபிஎஸ்ஸை நீக்கிய பிறகு, அந்த சமூகத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் சூழல் வரும் என்பதை எடப்பாடி உணராமல் இல்லை.

அதனால்தான், முக்குலத்தோர் வாக்குவங்கியை கொத்தோடு அள்ளுவதற்காகவே, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்றோரையும் எடப்பாடி நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் உதயகுமார் மீது மிகுந்த நம்பிக்கையை எடப்பாடி வைத்துள்ளதாக தெரிகிறது.

எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் உதயகுமார் இருக்கிறார். செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா போன்றோர் அந்த கட்சியின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள். எனினும் ஒட்டுமொத்த சமுதாய வாக்குகளையும் எடப்பாடி பக்கம் திருப்ப முடியாது என்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு அதிர்ச்சி தகவல் எடப்பாடி கூடாரத்தை எட்டியுள்ளது.

வரும் தேர்தலில் அதிமுகவை முக்குலத்தோர் சமூகத்தினர் மற்றும் அந்த சமூகம் சார்ந்த அமைப்புகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாம். எனவே, உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா போன்றோருக்கெல்லாம், கட்சியையும் தாண்டி மீடியா வெளிச்சம் அதிகம் பாய்ச்சப்பட வேண்டும் என்று ரகசிய உத்தரவை எடப்பாடி பிறப்பித்துள்ளாராம்.

அதேசமயம், தென்மண்டலங்களில் டிடிவி தினகரனின் செல்வாக்கை தகர்த்து, தன்னுடைய செல்வாக்கை கூட்டும் அளவுக்கு இன்னொரு யுக்தியையும் கையில் எடுத்துள்ளாராம். அதன்படி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனிடம் இருக்கும் நிர்வாகிகளை இழுக்கும் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறாராம். இதற்கான பொறுப்பை சேலம் இளங்கோவனிடம் தந்துள்ளாராம் எடப்பாடி. இதன் முதல் முயற்சியாக தென்மாவட்டத்தை சேர்ந்த அமமுக மண்டல பொறுப்பாளரிடம் ஒரு சுற்று பேச்சு வார்த்தையை இளங்கோவன் நடத்தி முடித்து விட்டதாகவும் சொல்கிறார்கள். விரைவில் அந்தப் பொறுப்பாளர் தலைமையில், தென் மண்டல அமமுக நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பக்கம் வரக்கூடும் என்கிறார்கள்.

இதற்கு பிறகு, திருச்சியை சேர்ந்த மாஜி எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர் போன்றோருக்கும் ஸ்கெட்ச் போட்டுள்ளதாம் இளங்கோவன் தரப்பு. அந்தவகையில், தென் மண்டலத்தை தொடர்ந்து இவர்களும் கூடிய சீக்கிரம் எடப்பாடி பக்கம் அதிமுகவில் இணையலாம் என்கிறார்கள்..

ஏற்கனவே ஓபிஎஸ் கூடாரத்துக்கு வலையை விரித்து, அங்குள்ளவர்களிடம், தூது நடவடிக்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் தினகரன் கூடாரம் பக்கமும் எடப்பாடி கவனத்தை திருப்பி உள்ளது, பரபரப்பை கூட்டி வருகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த சமயத்தில்தான், ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கையும், தெம்பையும் ஏற்படுத்தும் விதமாக, ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் தினகரனும், சசிகலாவும் பேசியிருந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. "தனி நபர் யாருமே முடிவெடுக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை அடிமட்ட தொண்டர்களின் முடிவு தான் இறுதி முடிவு. அதனால் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு கிடையாது என்று சசிகலா அவரது ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அதேபோல, ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர் என்பதை அழுத்தமாக சொல்லிவரும் தினகரன், "எடப்பாடிக்குப் போட்டி திமுக இல்லை. நானும் ஓ பன்னீர்செல்வமும் தான் போட்டி" என்று பேசியிருக்கிறார்.. அதுவும் தேனிக்கே சென்று அங்கு நடந்த விழாவில் பேசியுள்ளார்.. அந்தவகையில், எடப்பாடிக்கு எதிராக, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் ஆகியோர் ஒன்றுகூட உள்ள நிலையில், இதற்கான சந்திப்புகள் விரைவில் நடக்கக்கூடும் என்கிறார்கள்.. இவர்கள் ஒன்றிணையும் பட்சத்தில், முக்குலத்தோர் வாக்குகளை அள்ளுவதற்கு, எடப்பாடி பழனிசாமி இன்னும் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil