சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி.
தமிழக முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூடிப்பர் பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக பெண் காவலர்களை இழிவாக பேசிய யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி(ஆபாசமாக திட்டுதல்), 506 (1)( மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி (ஆபாசமாக திட்டுதல்), 354 டி(பெண்ணைப் பின் தொடர்தல்), 506(1)(மிரட்டல்), 509(பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார், தேனி பழனி செட்டிப்பட்டி போலீஸார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மேலும் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளிலும் சென்னை போலீஸார் விரைவில் சவுக்கு சங்கரை கைது செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu