11 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் : மருத்துவ பல்கலை., ஆய்வில் தகவல்..!
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு -ஒரு ஆய்வு (கோப்பு படம்)
‘‘உடல் பருமன், குழந்தைபேறின்மை போன்றவை புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது,'' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை., துணை வேந்தர் கே.நாராயணசாமி கூறினார்.
அவர் கூறியதாவது:
நம்நாட்டில், 10 ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு விகிதம், ஆண்டுக்கு 8 சதவீத அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 2021 - 22ல் நாடு முழுதும், 13.92 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. தமிழகத்தில், 81,814 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆண்களை காட்டிலும், புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ பல்கலையின் நோய் பரவியல் துறை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இணைந்து புற்றுநோய் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், 11 ஆண்களில் ஒருவருக்கும், 11 பெண்களில் ஒருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலோனார் ஆரம்ப நிலையில் கண்டறியாமல் இருப்பதால், உயிரிழப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.
புற்றுநோய்க்கான காரணத்தை உறுதியாக கண்டறிய முடியாவிட்டாலும், அதீத உடல் பருமன், குழந்தைபேறு இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம் போன்றவை, மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கலாம். இதுதவிர, மரபணு ரீதியான காரணங்களும் உண்டு.
பெரும்பாலான பெண்கள் ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறியாமல் இருப்பதற்கு, போதிய விழிப்புணர்வு இல்லாதது, பொருளாதார சூழல், வீட்டு முறை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளுக்கு விருப்பமில்லாமை உள்ளிட்டவை முக்கிய காரணங்கள்.
இதுதொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் வீடுதோறும் சென்று, பெண்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் அனைவரும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். புற்றுநோய் குறித்த தொடர் ஆராய்ச்சிகளை, மருத்துவ பல்கலை முன்னெடுத்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu