செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா? முதல்வர் முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா? முதல்வர் முடிவு செய்ய  நீதிமன்றம் உத்தரவு
X

அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்பு படம்).

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர வேண்டுமா? என்பதை முதல்வர் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் அண்மையில் சோதனை மேற்கொண்டனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலரிடம் வேலை தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணை செய்ய முயன்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிக்சை முடிந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகின்றார்.

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது தமிழ்நாடு அரசு, அமைச்சரவையின் திருப்தியின் அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என வாதிட்டது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே, ஒருவர் அமைச்சராக நீடிப்பதற்கான தகுதியை இழப்பார் எனவும் சுட்டிக்காட்டியது. இந்தநிலையில் இந்த மனுக்கள் மீது இன்று, தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை அமைச்சரவை வைத்திருக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது தீர்ப்பில் கூறி உள்ளது.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil