டீசல் விலை அதிகரிப்பால் போர்வெல் அமைக்கும் கட்டணம் அதிரடியாக உயர்வு
திருச்செங்கோட்டில் நடைபெற்ற ரிக் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில சம்மேளன தலைவர் லட்சுமணன் பேசினார்.
டீசல் விலையை குறைக்க வேண்டும், போர்வெல் வாகனங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி.யில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. இதனால், தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் 3 நாட்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
வேலை நிறுத்தப் போராட்டம் முடிவடைந்த நிலையில், திருச்செங்கோட்டில் ரிக் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் லட்சுமணன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, டீசல் விலை உயர்வால் ஒவ்வொருபோர்வெல் கிணறு அமைக்கும் போதும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ரிக் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு ரூ. 15 முதல் 25 வரை கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளோம். திருச்செங்கோடு பகுதியை பொறுத்தவரை ஒரு அடிக்கு ரூ.15 உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு எங்களது கோரிக்கையை ஏற்று மீனவர்களுக்கு வழங்குவது போல் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என கூறினார்.
இக்கூட்டத்தில், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார், உப தலைவர் சுப்பிரமணியம், உப செயலாளர் முருகவேல் உள்ளிட்ட ரிக் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu