பிஎப்.7 வகை கொரோனா: தடுப்பூசி போடாதவர்கள் எச்சரிக்கையாக இருக்கனும்
சீனாவில் பரவி வரும் கொரோனா தைவான், தாய்லாந்து, திபெத், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி உள்ளது. இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் ஜனவரி 15ம் தேதிக்கு மேல், அதாவது பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பரவல் தீவிரமாகி, பிப்ரவரி கடைசி வரை பரவல் நீடிக்கும் என இந்திய மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தற்போது உலக நாடுகளில் ஒமிக்ரான் வைரசின் புதிய திரிபான பிஎப்.7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரானை விட அதிகமாக பரவும் வேகம் கொண்டது. இதனால் தான் அரசும் வேகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு விட்டனர். 23 கோடி பேர் மூன்றாம் டோஸ் தடுப்பூசியும் போட்டு விட்டனர். இயற்கையான எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இதனால் இந்தியாவில் பெரும் பாதிப்பு இருக்காது என்றே இதுவரை கிடைத்த தகவல்கள் அடிப்படையில் நம்பி வருகிறோம்.
சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அத்தனை பேருமே தடுப்பூசி போடாதவர்கள் தான். சீனாவின் தடுப்பூசி திறன் குறைவு என்ற புகார் இருந்தாலும், அங்கும் தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. லேசான பாதிப்பினை மட்டும் ஏற்படுத்தி உள்ளது. பிற உலக நாடுகளிலும் இதே தகவல்கள் தான் பதிவாகி உள்ளது.
இந்தியாவின் தடுப்பூசி திறன் சக்தி மிகுந்தது. நம் நாட்டின் எதிர்ப்பு சக்தியும் அபரிமிதமானது. எனவே தடுப்பூசி போட்ட பலருக்கு அறிகுறிகள் இல்லாமலேயே பிஎப்.7 வந்து செல்லும். தடுப்பூசி போட்டவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு அறிகுறிகள் தெரியலாம். ஆனால் ஓரிரு நாள் சிகிச்சையில் அதுவும் சரியாகி விடும்.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பலர் தடுப்பூசி போடவில்லை. சில இடங்களில் தடுப்பூசி போடமல், தடுப்பூசி போட்டதாக பதிவு செய்த முறைகேடுகள் நடந்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பிஎப்.7 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும். உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.
தடுப்பூசி போட்டவர்களும், நாம் தான் இரண்டு டோஸ், மூன்று டோஸ் தடுப்பூசி போட்டு விட்டோமே என்று அலட்சியம் காட்ட வேண்டாம். கட்டாயம் முக கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், குறிப்பாக கூட்டம் சேரும் இடங்களை தவிர்த்தல், அதாவது சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது அவசியம். எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும், அலட்சியம் காட்டினால் ஆபத்தில் முடிந்து விடும். எனவே மக்கள் கவனமுடன் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu