தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி : புகாராக தெரிவிக்கலாம்..!

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி : புகாராக தெரிவிக்கலாம்..!
X

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி குறித்த விபரங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகாராக தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியை அரசுக்குத் தெரியாமல் யாராவது செய்தால், சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகாராகத் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :-

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிளாஸ்டிக் தட்டுகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கை பைகள், உணவுப் பொட்டலங்கள் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்கள்,ஸ்ட்ரா மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவைகளை தயாரிப்பது அவைகளை சேமித்து வைப்பது, விநியோகிப்பது, கொண்டுசெல்வது , விற்பது, உபயோகிப்பது போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி விளம்பர போர்டுகள், முள் கரண்டி, கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ரா, தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்கள் மேல் சுற்றப்படும் பிளாஸ்டிக் காகிதங்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிளாஸ்டிக் தடையை முழுவீச்சில் செயல்படுத்துவதற்காக புகார்கள் அடிப்படையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த தயாரிப்புக்கூடங்களை மூடுவதற்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அவ்வாறு இதுவரை 240 பிளாஸ்டிக் உற்பத்தி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

குறியிருப்புகள் சூழ்ந்த பகுதிகள் அல்லது பெரிய வணிக வளாகங்கள் அல்லது வணிக நிறுவனங்களுக்குள் சிறிய அளவில் செயல்பட்டு வரும் மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலான கடைகள் அரசிடம் முறையான பதிவு மற்றும் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன.

இப்படியான சூழலில் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் மையங்கள் அல்லது சிறிய ஆலைகள் குறித்த விபரங்களை அறிந்தால் அதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்கலாம். அதிகாரிகளின் தொடர்பு எண் விவரங்கள் https://tnpcb.gov.in/contact.php என்ற இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன.

புகார்களை தொலைபேசி மூலமாகவோ, இ மெயில், கடிதம் என எந்த வடிவிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், அவர்களின் பங்களிப்புக்காக பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
நீங்க ஒழுங்கா தூங்குறீங்களா? உங்க குழந்தைங்க....! கட்டாயம் கவனிங்க..!