ஆயிரம் நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஹரிநாடாருக்கு ஜாமீன்
நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் ஹரி நாடார்
பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் கடந்த ஆயிரம் (1000) நாட்களுக்கும் மேலாக, விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் தமிழகத்தைச் சார்ந்த ஹரி நாடாருக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரை அருகிலுள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஹரி நாடார், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பண மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடாரை, பல மாதங்களுக்குப் பிறகு நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர். அதேபோல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி புகாரில் ஹரி நாடாரை கைது செய்தனர். மேலும் திருநெல்வேலி மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் பண மோசடி புகார் ஒன்றில் ஹரிநாடாரை கைது செய்திருந்தனர்.
ராக்கெட் ராஜாவிற்கு ஆதரவாக அரசு பேருந்தை எரித்த ஒரு வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கிலும் போலீசார் ஹரிநாடாரை கைது செய்தனர் . தமிழக போலீசார் ஹரி நாடார் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஹரிநாடார் அப்போதே சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உடனடியாக ஜாமீன் பெற்று விட்டார்.
ஏற்கனவே, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹரி நாடார் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு CCH-1 சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இதற்கு முன்பாக மூன்று முறை ஹரி நாடார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது .அவரது மூன்று ஜாமீன் மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன .பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இதற்கு முன்பு இரண்டு முறை ஹரி நாடார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த இரண்டு ஜாமீன் மனுக்களும் பெங்களூர் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன .
கடைசியாக தற்போது ஹரி நாடாரின் வழக்கை விசாரணை செய்து வரும் நீதிமன்றமான CCH-1 சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஹரி நாடார் தரப்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி முருளிதரபாய் ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் .
நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஹரி நாடார் தரப்பில் காட்டிய பின்பு, சட்டப்படி இன்னும் ஓரிரு தினங்களில் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்து ஹரி நாடார் விடுதலை ஆகி வெளிவர இருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu