சென்னையில் ஜனவரி 12ம் தேதி அயலகத் தமிழர் தினம் கொண்டாட்டம்
பைல் படம்
தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் தொன்றுதொட்டு அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டதன் காரணமாகவும், வேலை தேடியும், வாழ்வாதாரத்திற்காகவும் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.
அரசு ஆணை எண்.1141, பொது (ம.வா-1) துறை, நாள் 13.12.2010, படி சென்னையில் உள்ள மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆணையரகத்தின் பெயர் "அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 13.12.2010 முதல் இயங்கி வருகிறது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) "மாவட்ட நல அலுவலர் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் மற்றும் மாவட்ட தலைமை மேலாளர் (குற்றவியல்) அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள பிரிவானது "மாவட்ட நல மையம் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணையரகம், பல்வேறு இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து வெளி நாடுகளில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களை தாயகம் மீட்டு வருதல், இறந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருதல், இழப்பீடு பெற்று தருதல் போன்ற இனங்களில் வெளி நாடு வாழ் தமிழர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறது.
இந்நிலையில் சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 12ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் "அயலகத் தமிழர் தினம் 2024" நடைபெற உள்ளது. தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் அயலகத் தமிழர் தினமாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததன் அடிப்படையில் 2022 மற்றும் 2023-இல் அயலகத் தமிழர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக "அயலகத் தமிழர் தினம் 2024" எதிர்வரும் 11.01.2024 & 12.01.2024 ஆகிய இரண்டு நாட்களில், முதலமைச்சர் அவர்கள் தலைமையில் "தமிழ் வெல்லும்" என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகளுடன், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) சிறப்பாக நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் விதமாக, தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களால் "அயலகத் தமிழர் தினத்தில்" விருது வழங்கி கவுரவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அயல்நாடுகளில் தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய எட்டு துறைகளில் தலை சிறந்து விளங்கும் தமிழர்கள் அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தின் (https://nrtamils.tn.gov.in/en/) வாயிலாக, விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அயலகத் தமிழர் தினத்தில் பங்கேற்பது, மற்றும் நிகழ்வுகள் தொடர்பான பிற விவரங்களுக்கு (https://nrtamils.tn.gov.in/en/) கொள்ளப்படுகிறது. அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu