இரவில் வீடு மீது கல்வீச்சு- பொதுமக்கள் சாலைமறியல்
இரவு நேரங்களில் வீடுகளின் மீது கற்களை வீசிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரியலூர் மாவட்டம் இடங்கண்ணி கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த பாலு, பூங்குன்றன், கபிலன் ஆகியோர் வீடுகளில் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் வீடுகளின் மீது கற்களை வீசியதில் மூன்று பேரின் வீடுகளிலும் ஜன்னல், கண்ணாடிகள் மற்றும் 2 கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து காலையில் கற்கள் வீசிய கார்த்தி மற்றும் அவரது நண்பரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதாக கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தா பழூர் காவல் நிலையம் முன்பு சுமார் 30 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu