தா. பழூர் அருகே சேறும் சகதியுமான சாலையில் சடலத்துடன் மக்கள் படும் அவதி

தா. பழூர் அருகே சேறும் சகதியுமான சாலையில் சடலத்துடன் மக்கள் படும் அவதி
X

தா. பழூர் அருகே இருகையூர் காலனியில் மயானத்திற்கு சடலத்தை எடுத்து செல்லும் பாதையில் சேற்றில் வழுக்கி விழும் நிலை உள்ளது.


தா.பழூர் அருகே இருகையூரில் சேறும் சகதியுமான சாலையில் மக்கள் சடலத்தை எடுத்து செல்ல மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமம் காலனி தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் யாரேனும் இறக்க நேரிட்டால் அவர்களது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு சுமார் 1 கி.மீ. தூரம் மண் சாலையில் நடந்து சென்றாகவேண்டும். தற்போது வரை மயானத்திற்கு செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லாத நிலை உள்ளது.

ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால் மயானத்திற்கு செல்லும் பாதையில் இறந்தவரின் உடலை சுமந்து செல்பவர்கள் மட்டுமின்றி நடந்து செல்பவர்கள் என அனைவரும் சேற்றில் வழுக்கி விழுந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக தன்ராஜ் (75) என்பவர் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது சேற்றில் பலர் வழுக்கி விழுந்தனர்.

இது போன்ற சம்பவம் மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இதற்கான தீர்வு என்பதே இதுவரை இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடுகாட்டிற்கு சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!