நான் மிசாவையே பார்த்தவன் ரெய்டு எம்மாத்திரம்? : ஸ்டாலின் காட்டம்
மிசாவையே சந்தித்த திமுக இந்த வருமான வரித்துறை சோதனைகளை கண்டு அஞ்சாது என்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு. க. ஸ்டாலின் கூறினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பெரம்பலூர் திமுக வேட்பாளர் பிரபாகரன், குன்னம் திமுக வேட்பாளர் சிவசங்கர், அரியலூர் மதிமுக வேட்பாளர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் கண்ணன் ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினர். அவர் பேசுகையில் தற்போது எனது மகள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
அதிமுகவினரை சோதனையிட்டு அவர்களை அஞ்ச வைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் மோடி அரசு கொண்டு வந்துள்ளது போல தற்பொழுது திமுக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவருவதால் திமுகவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வீட்டுக்குள் முடக்க மோடி அரசு நினைக்கிறது. இதன் வெளிப்பாடுதான் எனது மகளின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. ஆனால், நான் கலைஞரின் மகன். மிசா சட்டத்தையே சந்தித்தவன். பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்று கூறினார்.
மேலும் ஸ்டாலின் தனது உரையில் , தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் மோடி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், தாராபுரம் அதற்கு அருகாமையில் உள்ள பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகரின் தலைமையில் 250 பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளனர். இது மோடிக்கு தெரியாதா? அதுபோன்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவங்கள் மோடிக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடிக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். மோடி இருக்கும் மேடையில் எடப்பாடி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம். இதுபோன்று விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களையும் ஆதரிக்க மாட்டோம் என்று கூறட்டும். தைரியம் உள்ளதா? பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல. பச்சை துண்டு போட்ட எடப்பாடி விவசாயி அல்ல. அவர் ஒரு விஷ வாயு என்று மு. க. ஸ்டாலின் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu