கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு பணியில் ராஜேந்திர சோழன் அரண்மனை பாகம் கண்டுபிடிப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் அரண்மனை தென்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது அரண்மனை பாகங்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாடு தொல்லியல்துறை மூலம் 2020 - 21ம் ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு என்னும் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
இதனைத் தொடர்ந்து கொரோனா 2-ஆம்அலை ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 14ம் தேதிமுதல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியது.
தற்போது தொடர்ந்து மாளிகை மேட்டில் நடைபெறும் அகழாய்வு பணிகளில், கூரைஓடுகள், பானைஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்து தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவர் கடந்த மாதம் தென்பட்டது. தற்போது மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கியதன் காரணமாக அரண்மனையின் தொடர்ச்சியாக 2வது பாகமும் கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வுப் பணிகள் தொடர்ச்சியில் சிலமாதங்களில் அரண்மனையின் மற்ற பாகங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். ராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்தில் மாளிகைமேடு என்னும் பகுதியில்தான் தனதுஅரண்மனையை கட்டமைத்து இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
அந்தவகையில் தற்போது அரண்மனை பாகங்கள் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்று இருப்பது சோழர்களின் வரலாற்று சுவடுகளை உறுதிசெய்கின்றன என்றும், மேலும் சோழர்களின் வரலாற்று அரிய பொக்கிஷங்கள் இன்னும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முழுஅளவில் வரலாற்றை தெரிந்துகொள்ள தற்போது கங்கை கொண்ட சோழபுரத்தில் நான்கு குழிகள் மட்டுமே தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெறுவதை தமிழ்நாடு அரசு அதிக நிதியை ஒதுக்கி 40குழிகள்வரை தோண்ட அனுமதி வழங்கவேண்டும். அவ்வாறு செய்தால் அரண்மனையில் மொத்த பரப்பையும் கண்டெடுக்க முடியும். இதன்மூலம் பல அரிய வரலாற்று பொருள்கள் கிடைக்கும் என்று வரலாற்று ஆராயச்சியாளர் தியாகராஜன் கூறுகின்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu