விளந்தை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரியலூர் கலெக்டர் பங்கேற்பு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்,விளந்தை ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது
தமிழக அரசு உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த ஊராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் 3 இலக்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதல் இலக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று,நீர் நிறைந்த கிராமம் ஆகும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குடிநீர் இணைப்பு வழங்க முடியாத குடும்பத்தினருக்கு சிறுமின்விசை தொட்டி,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் போர்வெல் அமைத்து தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு குடிநீர் திட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கிராம மக்கள் குடிநீர் வீணாவதை தவிர்த்து,சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும்.தங்களது பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் வீணாக குடிநீர் செல்வதை தடுத்து நீரை சிக்கனமாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவது இலக்கு சுத்தமான பசுமையான கிராமம் என்பது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். மேலும் தமிழக அரசு தற்பொழுது மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை கொண்டு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து மஞ்சப்பை மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்க வேண்டும்.தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என குப்பைகளை தூய்மைக் காவலர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். இதனால் குப்பைகளை மறுசுழற்சி செய்வது எளிதாக இருக்கும்.பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதைப்போல தங்களது ஊரையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எனது உங்களது ஊரையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.மேலும் நுகர்வோர் தங்களுக்கு தேவையான பொருட்களை சரிபார்த்து வாங்க வேண்டும். இதுவே பொறுப்பான நுகர்வோர் கடமையாகும்.
மூன்றாவது இலக்கு குழந்தைகள் நேய ஊராட்சி என்பது குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதாகும்.இதன்படி ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளை சிறப்பாக பராமரிப்பதுடன்,குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தவிர்த்தல்,குழந்தை துன்புறுத்தலை தவிர்த்தல்,பாலியல் வண்கொடுமை நடைபெறாமல் தடுத்தல்,குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தடுத்தல்,சரியான வயது வந்த பிறகே திருமணம் நடைபெறுவதை உறுதிசெய்தல், ஆண் பெண் குழந்தைகளுக்கு பாகுபாடில்லாத சமமான கல்வி கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது ஊராட்சியை குழந்தைகள் நேய ஊராட்சியாக மாறுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.இந்த மூன்று இலக்குகளையும் வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து வரக்கூடிய கிராம சபை கூட்டங்களில் எடுத்து விவாதிக்க வேண்டும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் அட்டை கட்டாயம் ஆகும். இனிவரும் காலங்களில் இதன் மூலமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஊராட்சியில் விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் இப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தவறாது கலந்து கொண்டு மருத்துவச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களை தொடர்ந்து பெற இயலும். எனவே இம்முகாமை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கிராம சபைக் கூட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஊராட்சி, கொளப்படி அருந்ததியர் காலனியில் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவின் அடிப்படையில் நேரில் சென்று ஆழ்குழாய்கிணறு மின்மோட்டார் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்கள் கோரிக்கையாக மயானம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள உரிய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், விளந்தை ஊராட்சி மன்றத்தலைவர் நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu