தமிழர் நீதிக்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது

தமிழர் நீதிக்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேர்.

ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுபா இளவரசன் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி வல்லம் கிராமத்தைச் சேர்ந்த சுபா இளவரசன் இருவரும் சேர்ந்து விடுதலைப்படை என்ற இயக்கத்தை உருவாக்கி நடத்தி வந்தனர்.

ராமசாமிக்கும் இளவரசனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர். இதில் கடந்த 1996 -ல் குவாகம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்றவர் மீது மிளகாய் பொடியைக் கண்ணில் தூவி ராமசாமி படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழர் விடுதலைப் படையில் இருந்த கு. வல்லம் கிராமத்தை சேர்ந்த சுபா இளவரசன் தமிழர் நீதி கட்சி என்ற அமைப்பை நிறுவி தற்போது நடத்தி வருகிறார். இவர் கடந்த 10 -ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது துளாரங்குறிச்சி அருகே மர்ம நபர்கள் சிலர், இவர் கார் மீது துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சுபா இளவரசன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ராமசாமியின் மகன்கள் தமிழ்மறவன் (30) அவரது தம்பி இளந்தமிழன் (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இளந்தமிழன் மற்றும் தமிழ் மறவன் இருவரும் தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டு வருவதாகவும், தனது தந்தை படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் சுபா இளவரசன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை கொலை செய்ய முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் (48), கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த கலை என்கிற ரவிச்சந்திரன் (51) ஆகிய இருவரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை என்கிற ரவிச்சந்திரன் மீது 1997 -ல் ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷனில் துப்பாக்கி கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் விசாரணையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

பழிக்குப் பழி என்ற நோக்கில் செயல்பட்ட தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!