அரியலூர் நகராட்சி துணைத்தலைவராக கவுன்சிலர் கலியமூர்த்தி வெற்றி
அரியலூர் நகராட்சி துணைத் தலைவராக பதினொரு வாக்குகள் பெற்று 7வது வார்டு கவுன்சிலர் கலியமூர்த்தி வெற்றி பெற்றார்.
அரியலூர் நகராட்சி துணைத் தலைவர் தேர்தல் இன்று அரியலூர் நகர மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலர் க. ரகு தேர்தல் நடத்தும் அலுவலராக அறிவிக்கப்பட்டு கூட்ட அரங்கில் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்தார்.
கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் சாந்தி, இரண்டாவது வார்டு கவுன்சிலர் செல்வராணி, 3வது வார்டு கவுன்சிலர் சத்தியன், ஆறாவது வார்டு கவுன்சிலர் ரேவதி, 14வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, 15வது வார்டு கவுன்சிலர் ராணி, 16வது வார்டு கவுன்சிலர் ராஜேஷ் ஆகிய திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக ஆதரவு கவுன்சிலர்கள் 1வது வார்டு ஜேசுமேரி, நாலாவது வார்டு கண்ணன், 7வது வார்டு கலியமூர்த்தி, 18-வது வார்டு புகழேந்தி ஆகிய பதினொரு பேர் திமுக சார்பில் வருகை தந்தனர்.
திமுக கவுன்சிலர்கள் 8வது வார்டு ராஜேந்திரன், ஒன்பதாவது வார்டு மகாலட்சுமி, 10வது வார்டு இன்பவள்ளி, 11வது வார்டு முகமது இஸ்மாயில், 13வது வார்டு வெங்கடாஜலபதி, 17வது வார்டு ஜீவா ஆகிய ஆறு பேரும், சுயேச்சை கவுன்சிலர் மலர்கொடி மனோகரன் ஆகிய ஏழு பேரும் ஓரணியாக வருகை தந்தனர். துணைத் தலைவர் தேர்தலுக்கு திமுக சார்பில் 7வது வார்டு கவுன்சிலர் கலியமூர்த்தியும், அதிமுக சார்பில் 12வது வார்டு கவுன்சிலர் மலர்கொடி மனோகரனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. நகராட்சி தலைவர் மற்றும் 17 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட 7வது வார்டு கவுன்சிலர் கலியமூர்த்தி 11 வாக்குகள் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட மலர்கொடி மனோகரன் 6 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு யாருக்கும் பதிவு செய்யப்படவில்லை
துணை தலைவராக கலியமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற துணைத்தலைவர் கலியமூர்த்திக்கு அனைத்து கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu