கட்சியை நீ நடத்துகிறாயா? மூத்த அமைச்சரிடம் சீறி பாய்ந்த மு.க. ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் தி.மு.க. உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஊரகப் பகுதிகளில் தேர்தல் முடிவுற்ற நிலையில் மாநகர பகுதிகளில் மட்டும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இது தி.மு.க.வின் 15வது உட்கட்சி அமைப்பு தேர்தலாகும்.
மாநகராட்சி பகுதிகளைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்சியின் வட்ட செயலாளர் பதவிகள் நிர்வாக வசதிக்காக எனக்கூறி அதிகரிப்பு செய்யப்பட்டன.
உதாரணமாக தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாநகர் மாவட்ட பகுதியில் 65 வட்டங்கள் இருந்த நிலையில் அவை 93 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக 93 வட்டங்களுக்கு வட்டச் செயலாளர்கள், அவைத்தலைவர், துணை செயலாளர்கள், பிரதிநிதிகள் என நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் தான் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் வார்டு செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உட்கட்சி அமைப்பு தேர்தலில் இவை மேலும் அதிகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
திருச்சி மாநகர் பகுதியை பொறுத்தவரை 93 என இருந்த வட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 134 ஆக உயர்த்த கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட வட்டங்களில் செயலாளர்களை நியமிப்பதற்காக விருப்ப மனுக்களும் கட்சி ரீதியாக பெறப்பட்டு வந்தது. இதேபோல கரூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்த நிலையில்தான் இந்த வட்டச் செயலாளர் பதவிகளுக்கு திடீரென செக் வைத்துள்ளார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க ஸ்டாலின்.
சென்னையில் மு.க. ஸ்டாலினை சந்தித்த கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர் தனது மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சியில் வட்ட செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி பட்டியலை தயாரித்து கொடுத்து உள்ளார். இதில் அவரது ஆதரவாளர்கள் பலருக்கு புதிதாக வட்டச்செயலாளர் பணியிடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளின் வார்டுகள் பிரிக்கப்பட்டு அவர்களது அதிகாரம் குறைக்கப்பட்டு இருந்தது .
இது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இதேபோன்று தமிழகம் முழுவதிலும் தி.மு.க. மீது உண்மையான பற்று கொண்ட மூத்த நிர்வாகிகள், போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள் ஒதுக்கப்படுவது, அவர்களது அதிகாரம் குறைக்கப்படுவது, தொடர்பான புகார்கள் கட்சித் தலைமைக்கு ஏராளமாக வந்ததாலும் தற்போது அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளராக இருப்பவர்கள் தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக தங்களது ஆதரவாளர்களுக்கு புதிய பதவி இடங்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான் வட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதாகவும் முதல்வருக்கு உளவுத்துறை மூலம் தகவல்கள் கிடைத்தன.
இதன் காரணமாகவே புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை. நிராகரித்துவிட்டார். இதுபற்றி மத்திய மண்டலத்தில் மூத்த அமைச்சராக இருப்பவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது மாவட்டத்திலும் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், புதிதாக நியமிக்கப்படும் வட்டச் செயலாளர்கள் உற்சாகமாக பணியாற்றுவார்கள் இதன்மூலம் கட்சி மேலும் பலப்படும் என்று கூறியுள்ளார். அவரது பேச்சின் உள் நோக்கத்தை புரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரிடம் சீறிப்பாய்ந்து உள்ளார். சரி சரி நீங்களே கட்சியை நடத்திக் கொள்ளுங்கள். நீங்களே முதலமைச்சராக இருந்து கொள்ளுங்கள். நான் எதற்காக தலைவராக இருக்கவேண்டும்? நீங்களாகவே முடிவு செய்துவிட்டு என்னை ஏமாற்ற பார்க்கிறீர்களா என கொந்தளித்துள்ளார். அவரது கோபத்தை தாங்க முடியாது அமைச்சர் மறுபேச்சு பேசாமல் கிளம்ப தயாரானார்.
அப்போது அவரிடம் திருச்சியில் மட்டுமல்ல எல்லா மாநகராட்சி பகுதிகளிலும் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளதோ அதே அளவிற்கு தான் வட்ட செயலாளர்கள் எண்ணிக்கையும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தேர்தலில் எந்தவித குழப்பமும் இன்றி பணியாற்ற முடியும் .அதற்கான பட்டியலை தயாரித்து கட்சி நிர்வாகிகள் தேர்தலை விரைவாக நடத்தி முடியுங்கள் என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் இப்படி கூறியது அமைச்சர்களுக்கு 'ஷாக்'அடிப்பதுபோல் இருந்தாலும் தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் கட்சி நலனே தனது நலன் என கருதி அல்லும் பகலும் கட்சிக்காக பாடுபட்டு வரும் உண்மையான தி.மு.க. தொண்டர்ர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu