இலவசங்களால் ஆதாயம் அடைவது யார்..?

இலவசங்களால் ஆதாயம் அடைவது யார்..?
X

இலவசங்களால் யாருக்கு நன்மை?(கோப்பு படம்)

இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதத்திற்குள் போவதற்கு முன்பு நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

இலவசங்கள் வேண்டும், வேண்டாம் என்று கூறும் இரு தரப்பு அரசியல்வாதிகளும் ஒரே நோக்கம் கொண்டவர்களே.

”மக்களின் தேவை அறிந்து ஒன்றை இலவசமாக தருவது என்பது ஒரு அரசியல் கட்சி அல்லது அரசாங்கம் எடுக்கும் முடிவு. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என வெங்கய்யா நாயுடு தொடங்கி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வரைக்கும் பல அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்.

இன்றைக்குள்ள அரசுகள் தீட்டும் திட்டங்கள், போடும் சட்டங்கள் யாவுமே தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், முதலாளிகளின் நலனுக்குமானது தான்.


”இலவசங்கள் தேவை” என்பதற்கு பின்னணியிலும், ”இலவசங்கள் வேண்டாம்” என்பதற்கு பின்னணியிலும் ஒளிந்து கொண்டிருப்பது ஒரே நோக்கம் தான். ”இலவசங்கள் குறித்த ஆழமான விவாதம் தேவை” என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ”இலவச அறிவிப்புகளையும், மக்கள் நல வளர்ச்சி திட்டங்களையும் நாங்கள் பிரித்து பார்க்கவே விரும்புகிறோம்” என்றும் நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

“கிராமப்புற மாணவர்களுக்கு சைக்கிள் தரப்படுவதால் அவர்கள் கல்வி கற்று பயனடைவர். அது போல பிற்படுத்தப்பட்ட கிராம மக்களின் முன்னேற்றத்திற்காக கால்நடைகள் வழங்கப்படுகின்றது. 100 நாட்கள் வேலை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது போன்ற திட்டங்களை எல்லாம் கண்மூடித்தனமாக இலவசங்கள் என கூறவில்லை” என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

அதே சமயம் இலவசத்திற்கான சுமைகளை அரசுகள், பணக்காரர்கள் தலையில் ஒரு போதும் ஏற்றிவிடாது. அதிலும் பயன் பெறக் கூடியதாகவே முதலாளி வர்க்கம் உள்ளது. ஆகச் சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களும் ஏழை, எளிய மக்கள் தான்.

சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு இலவச அறிவிப்புகளை வெளியிடுவது பொருளாதார சீரழிவுக்கு வழி வகுக்கும். குறிப்பாக இலவச மின்சார அறிவிப்பால் மின் கழகங்கள் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்திக்கின்றன” என்றார்.

அரசின் கொள்கை முடிவு, மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்படுவை யாவும் பொது நலன் சார்ந்தவையா? ‘டாஸ்மாக் கடைகள் மக்கள் வாழ்வை சூறையாடுகின்றன’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், ”இது அரசின் கொள்கை முடிவு” என்று வாதிடப்படுகிறதே? அந்த பணத்தால் தான் மக்கள் நலத் திட்டங்கள் செய்கிறார்களாம்.

அந்தப் பணம் ஏழைக் குப்பனிடமும், சுப்பனிடமும் உருவியது தானே. அவன் பெண்டாட்டி , பிள்ளைகளை பட்டினி போட வைத்து பிடுங்கப்பட்ட பணம் தானே? டாஸ்மாக்கால் யாருடைய கஜானா நிரம்புகிறது..? அரசாங்கம் பனங் கள்ளை ஆதரித்தால் லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைவர்களே.


ஏழ்மை தலைவிரித்தாடிய ஒரு காலகட்டத்தில் காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். இதனால் கூடுதல் பள்ளிகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு அதிக மாணவர்கள் சேர்ந்தனர்.

இன்று பொருளாதாரம் நன்கு வளர்ந்த நிலையில் மதிய உணவு மட்டுமின்றி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசங்கள் என்ற பெயரில் 14 விதமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக பல ஆயிரம் கோடிகள் கணக்கு எழுதப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, தரமான கல்விக்கு உத்திரவாதமின்மை ஆகியவற்றால் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைகின்றன. அதைக் காரணமாக்கி, நூற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கிறார்கள்.

இந்த 14 இலவசங்களால் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய முதலாளிகள் பலனடைகிறார்கள். அரசியல்வாதிகளும் ஆதாயம் அடைகிறார்கள். தரமான கல்வி ஒரு அடிப்படை உரிமையல்லவா?

தமிழகத்தில் கலைஞர் 2006 ஆம் ஆண்டு ஒரு கிலோ அரசி இரண்டு ரூபாய்க்கு ரேஷனில் போடப்படும் என தேர்தல் வாக்குறுதி தந்தார். அவர் வெற்றிக்கு அது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ஆகவே, அடுத்த தேர்தலில் ஜெயலலிதா விலையில்லா அரசி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். அதனால் வெற்றி சாத்தியமானதாக நம்பப்பட்டது.

மக்கள் இரண்டு ரூபாய்க்கோ அல்லது இலவசமாகவோ அரசி வேண்டும் என்றோ’ எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ‘ரேஷனில் தரப்படுகின்ற அரசி பொங்கி சாப்பிடும் வகையில் தரமானதாக இருக்க வேண்டும்’ என்பதே பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருணாநிதி டெலிஷனை இலவசமாக அறிவித்தார். அப்போது சன் டிவியும், கேபிள் இணைப்பை தரும் சுமங்கலி கேபிள் விஷனும் தன் நிகரற்ற செல்வாக்கோடு தமிழக தொலைகாட்சி துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா இலவச கிரைண்டர், மிக்சி, டேபிள் பேன் வழங்கினார். இவை வெகு சீக்கிரம் கயலான் கடைக்கு வந்தன. இவை யாவும் மக்கள் கோரிக்கை வைக்காத இலவசங்கள். ஓட்டு பொறுக்குவதற்காக தரப்பட்டவை.

இலவசமாக மக்கள் எதிர்பார்ப்பது தரமான கல்வி, நல்ல மருத்துவம், உழைப்பதற்கான வாய்ப்பு ஆகியவையே. இந்த மூன்றிலும் வரைமுறையில்லாமல் தனியார் கொழுக்கும் வகையில் தான் மத்திய, மாநில அரசாங்கங்கள் திட்டம் தீட்டி வருகின்றன. ஒரு பக்கம் முதலாளிகளை கொழுக்க வைத்து, மக்களை ஓட்டாண்டியாக்கி பார்க்கும் இவர்களுக்கு மக்களை கையேந்தும் நிலையில் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் தான் அரசியல் எதிர்காலமே அடங்கியுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவித்து 25% மாணவர்கள் கட்டணத்தை அரசே தருகிறது. இந்தப் பணத்தை ஏன் ஓராசியர் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் செலவிடுவதில்லை? இன்சூரன்ஸ் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு அரசு செலவழிக்கும் பணம் அரசு மருத்துவமனைகளின் போதாமைக்கு செலவழிக்கலாம். ஏன் செய்வதில்லை?

தனியார் பெரு முதலாளிகளுக்கு வங்கி கடன் வாரித் தரப்படுகிறது. திருப்பித் தர முடியவில்லை எனில் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆகவே, எளியவர்களுக்கு தரப்படும் கடன்களையும் திருப்பி கேட்காதே என்பது சரியான வாதமா? அது ஏற்கனவே அரசு தனியார் பலனடைய செய்து வரும் குற்றத்தை நியாயப்படுத்திவிடாதா? ”அந்த தனியார் முதலாளிக்கு தரப்பட்ட கடன்களில் கறார்த் தன்மை வேண்டும். அதை வசூலித்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்’’ என்பது தான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆக, இலவசங்கள் வேண்டும் என்பதும் வேண்டாம் என்பதும் முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்து செயல்படும் அரசாங்கத்தை பொறுத்த அளவில் ஒன்று தான். ஒரு மக்கள் நல அரசு செய்ய வேண்டியது மக்களை வாங்கும் சக்தி மிக்கவர்களாக ஆக்குவது தான். அதற்கு தடையாக இருக்கும் சுயநல சக்திகளை விலக்கி வைப்பது தான். தற்போது இலவச மின்சாரத்தை எதிர்க்கும் பாஜக அரசு உ.பி, மற்றும் குஜராத் தேர்தல்களில் எத்தனையெத்தனை இலவச அறிவிப்புகளை தந்துள்ளன.. எனப் பார்க்க வேண்டும்.

இயற்கை தேவைக்கும் அதிகமாகவே மனிதகுலத்திற்கு அள்ளித் தருகிறது. மொத்த நிதி ஆதாரங்களில் 90 சதமானவற்றை பத்து சதவிகிதற்கும் குறைவானவர்கள் அபகரித்து வைத்துள்ளனர். மிச்ச பத்து சதமானவற்றை 90 சதமான மக்கள் பெற்றுக் கொள்வதும் கூட அந்த செல்வந்தர்களை சார்ந்து தானே உள்ளது. அது தான் தகர்க்கப்பட வேண்டும்.

மக்கள் சுய சார்போடு சுதந்திரமாக வாழ உத்தரவாதம் இருந்தாலே போதுமானது. சிறு, குறுந்தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்கான கை, கால்களூடனும், தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளும் அறிவுடனும் தான் பிறக்கிறான். மக்கள் அரசாங்கத்தையோ, தனியொரு முதலாளிகளையோ சார்ந்து இல்லாமல் வாழும் உத்தரவாதத்தை பாதுகாப்பது தான் மக்கள் நல அரசு செய்ய வேண்டியதாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!