அரவிந்தசாமி சொன்ன புத்தகத்தை கட்டாயம் படிக்கணுமா?
அரவிந்தசாமி
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology Of Money புத்தகத்தையும் இளைஞர்கள் எல்லோரும் வாங்கிப் படிங்க என்று சொல்லியிருப்பார். நீங்க இதுவரை புத்தகமே படிக்காதவரா இருந்தாக்கூட இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்க. இதுக்கு மேலேயும் புத்தகங்கள் படிங்க என்று சொல்லியிருப்பார்.
மார்கன் ஹௌஸ்ஸல் எழுதிய இந்தப் புத்தகம், பணம்சார் உளவியல் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதற்கு முன்னர் பலரும் இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்திருந்தாலும், அரவிந்த்சாமி சொன்னபிறகு, இப்பொழுது பலரும் தேடிப் படிக்கும் புத்தகமாக மாறிவிட்டது.
"ஒரு நடிகர் சொன்னதும் இந்தப் புத்தகத்துக்கு ஏன் இவ்வளவு கேள்வி? படிச்சு பணக்காரரா ஆகவா போறீங்க? தீவிர இலக்கியங்கள் படியுங்க. மனித மனங்களைப் படியுங்க" என்றெல்லாம் இலக்கியவாதிகள் என்று தம்மை நினைப்பவர்கள் இளைஞர்களுக்குச் சொல்கிறார்கள். இலக்கியங்கள் படிப்பது மிக, மிக நல்ல விஷயம் தான்.
ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க பணம் குறித்து பகுத்தறிந்து சிந்திப்பது எப்படி என்று பேசுகிற புத்தகம். சிறுகச் சேர்க்கிறது என்னாகும்? Compounding effect பற்றி பேசுகிற புத்தகம். எப்படி சம்பாதிக்கிற பணத்துக்கு safety net போட்டு வெச்சுக்கிறது என்று பேசும் புத்தகம். Wealth என்றால் என்ன Rich என்றால் என்ன? Sustainable Financial Security னா என்ன என்றெல்லாம் பேசும் புத்தகம்.
இந்தப் புத்தகம் பணம் குறித்த உங்களின் உளவியலைப் பேசுகிறது. எல்லா விதமான புத்தகங்களையும் படிப்பது நல்லதொரு பார்வையைக் கொடுக்கும். படியுங்கள். நல்ல இலக்கியங்களையும் படியுங்கள். இதையும் படியுங்கள். உங்களை வாசிப்புக்குள் இந்தப் புத்தகம் கூட்டிவருகிறது என்றால் வாருங்கள். Peter Lynch ஐ படியுங்கள். பெஞ்சமின் கிரஹாம் எழுதிய தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்டரை படியுங்கள். விஞ்ஞானத்தைப் படியுங்கள். க. நா. சு, தி. ஜா, பத்மநாபன், பாரதியார், நகுலன் எல்லோரையும் படியுங்கள்.
இந்தப் பணம்சார் உளவியல் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டால் நாளையே பில்கேட்ஸ் என்றில்லை. ஆனால் சம்பாதிக்கிற பணத்தை, இருக்கிற பணத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்காகவேனும் வாங்கிப் படியுங்கள். முடிந்தால் ஆங்கிலத்திலேயே வாங்கிப் படியுங்கள்.
Rule No. 1 : Never lose money. Rule No. 2 : Never forget Rule No. 1. - Warren Buffett
(எந்தப் புத்தகத்தையும் உங்களுக்குத் தேவையென்றால் ஒருசில பக்கங்களைப் படித்துப் பார்த்துவிட்டு வாங்குங்கள். இந்த வகையான புத்தகம் படிங்க. இதைப் படிக்காதீங்க என்று சொல்பவர்களுக்காக இந்தப் பதிவு எழுதப்பட்டது. புதிதாக வாசிப்பவர் என்றால் படியுங்க. பிடிக்கலயா? வேற புத்தகம் வாங்கிப் படியுங்கள். உங்களுக்கான புத்தகங்களைத் தேடிக் கண்டறிந்து படியுங்கள்)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu