(APY) அடல் பென்ஷன் யோஜனா..! ஓய்வூதிய திட்டம்..! எப்படி விண்ணப்பிக்கலாம்..!

APY Scheme in Tamil
APY Scheme in Tamil-ஓய்வு காலத்திற்கு ஏற்ற சூப்பர் திட்டம் இது. பலரின் வரவேற்பை பெற்ற திட்டம். இத்திட்டத்தில் ஆன்லைனில் E- KYC மூலம் எப்படி இணைவது என்பதை பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டங்களில் அடல் பென்ஷன் யோஜனா(APY) திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாகும். அறிவித்த சில ஆண்டுகளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாகும்.
ஏனெனில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கும், இந்த ஓய்வூதிய திட்டம் ஓய்வுகாலத்தில் பென்ஷன் பெறலாம் என்ற நம்பிக்கையைஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்? எப்படி ஆன்லைனில் E- KYC மூலமாக இணைவது? என்பதை இங்கு காணலாம்.
யார் இணைய தகுதியானவர்கள்?
அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் விண்ணப்பதாரர் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது அஞ்சல் நிலையத்திலிருந்து தொடங்கலாம். தற்போது இதனை ஆன்லைனிலும் E- KYC மூலமாக இணையும் வசதியியையும் கொண்டு வந்துள்ளது.
எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து, ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒருவேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
குறைந்தபட்ச முதலீடு?
18 வயதில் இந்த திட்டத்தில் இணைவதாக வைத்துக்கொண்டால், தினசரி 7 ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 210 ரூபாய் முதலீடாகும். பணம் செலுத்த வேண்டியது 42 வருடங்களாகும்(அதாவது 42+18=60). இதன் மூலம் 61வது வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.
மாதம் ரூ.4,000 ஓய்வூதியத்திற்கு?
இதே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 64 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் ஓய்வூதியமாக கிடைக்கும்.
தாமத இணைவுக்கு என்ன செய்வது?
ஒருவர் 30 வயதில் இணைகிறார் எனில், அதற்கேற்ப முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு மாதம் ரூ.1000 பென்ஷன் பெற மாதம் ரூ.116 தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். இதே மாதம் ரூ.5000 ரூபாய் பெற 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் ரூ.1,454 செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தான் 60 வயதுக்கு பிறகு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
எவ்வாறு இணைவது?
எந்த வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில், இந்த அடல் பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, முகவரி சான்று, அடையாள சான்றை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் வங்கி ப்ரான் எண்ணை பதிவு செய்து கொடுக்கும்.
எவ்வளவு செலுத்தலாம்?
மாதம் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் போதே, 60 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை ஓய்வூதியமாக வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆக பெற நினைக்கும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
எப்படி பணம் கட்டுவது?
அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த பின், மாதா மாதம் செலுத்த வேண்டிய சந்தா தொகையை, வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலம் வங்கியே எடுத்துக்கொள்ளும்விதமாக செய்துகொள்ளலாம்.பணம் எடுத்துக்கொண்டதற்கு ஆதாரமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். பணம் செலுத்தினாலும், பணம் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்ற தகவலும் எஸ்எம்எஸ் மூலம் வரும்.
தவணை எப்போது செலுத்த வேண்டும்?
இந்த திட்டத்தில் எப்போது முதல் முறையாக இணையும் தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு அக்டோபர் 28ல் இந்த திட்டத்தினை தொடங்கினால் நவம்பர் 28ல் மீண்டும் தவணையை செலுத்த வேண்டும்.
தொகையில் மாற்றம் செய்யலாமா?
ஆரம்பத்தில் 200 ரூபாய் தொகையினை செலுத்திவிட்டு, ஐந்து வருங்டங்கள் கழித்து இந்த தொகையினை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்றால் அதையும் செய்ய முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இந்த தொகையில் மாற்றம் செய்ய முடியும். ஏப்ரல் மாதத்தில், தொகையினை கூடுதலாக செலுத்தவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ முடியும்.
அவசரத் தேவைக்கு பணம் எடுக்கலாமா?
அடல் பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர் 60 வயதுக்கு பின் இறந்து விட்டால், அவரது இறப்பு சான்றும், இந்த திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் ஆட்டை, நாமினியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளையில் கொடுத்தால், வங்கி அந்த விவரங்களை PFRDA-வுக்கு அனுப்பும். இந்த நகல்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர், பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும்.
செலுத்திய தொகை மட்டுமே கிடைக்கும்?
ஒரு வேளை சந்தாதாரர் 60 வயதுக்கு முன்னரே இறந்தால் அல்லது மிக மோசமான நோய் காரணமாக பணம் எடுக்க வேண்டும் என்றால். சந்தாதாரர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அதை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான சரியான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இடையில் வழங்கப்படும்.
சிறப்பம்சம் இது தான்?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு அந்த தொகை கிடைக்கும். மொத்தத்தில் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு பயனுள்ள திட்டமாகும்.
நாமினியை மாற்ற முடியுமா?
ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாமினி துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நாமினியை மாற்றிக் கொள்ள முடியும். எந்த வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டதோ அதே வங்கியில் சரியான ஆவணங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
வங்கியினை மாற்றிக் கொள்ளலாமா?
ஆரம்பத்தில் எஸ்பிஐ வங்கியில் பென்ஷன் கணக்கினை தொடங்கியிருந்தால், பின்னர் இதனை வேறு வங்கிக் கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். இப்படி ஒரு திட்டத்தினை இதுவரையில் வங்கிகளிலும், அஞ்சலத்திலும் தொடங்கிக் கொள்ளலாம் என இருந்தது. தற்போது தான் ஆன்லைனில் தொடங்கிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் எப்படி?
இதனை CRA அமைப்பு மூலம், ஆன்லைனில் E-KYC செய்து கொள்ளலாம். இதன் மூலம் காகிதமற்ற செயல்முறை மூலமாகவே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என PFRDA அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்து APY service வழங்கும் அனைத்து வங்கிகள் மற்றும் அனைத்து தரப்புக்கும் e- APY Link-னை கொடுத்துவிடும், இந்த லிங்குகள் சேவை வழங்குனர்களின் இணையத்தில் இருக்கும். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.
ஆதார் இணைப்பு
அனைத்து APY கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் அனைத்து சேவைகளும் எளிதாக இருக்கும். எனினும் இது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனைத்து வகையான அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளையும் ஆதார் அவசியம். ஆன்லைனிலும் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளும் வசதிகள் வந்துள்ள நிலையில், இதுவும் வரவேற்கத்தக்க விஷயம் தான்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu