செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட அன்புமணி வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகில் அமைந்துள்ள மேல்மா சிப்காட் 3வது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.அரசின் இந்த முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிா்ப்பு விவசாயிகள் இயக்கம் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தினா்.
அவா்கள் மீது பதிவான 11 வழக்குகளளின் அடிப்படையில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் அருள் ஆறுமுகம் உட்பட 22 போ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனா். இதில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேரை குண்டா் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி உத்தரவிட்டாா். பின்னா், 6 போ் மீதான குண்டா் சட்ட நடவடிக்கையை திரும்பப்பெற்ற அரசு, அருள் ஆறுமுகம் மீதான குண்டா் சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை.
இந்நிலையில், தனது கணவா் அருள் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி பூவிழி கீா்த்தனா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா் மற்றும் சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அருள் ஆறுமுகம் எந்தவொரு தீவிர குற்றத்திலும் ஈடுபட்டுள்ளாா் என்பதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில், மக்களைத் தூண்டியதாகவும், நிலம் வழங்க முன்வருபவா்களை தடுத்தாா் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில், உள்நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். எனவே, மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடா்பான விவரங்கள், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை ஆவணங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.
இந்நிலையில் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கான உழவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டித்து உழவர்களைத் திரட்டி போராட்டங்களை ஒருங்கிணைத்ததற்காக அருள் ஆறுமுகம் என்ற உழவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது; நியாயமற்ற முறையில் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகச் சரியானவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடர்பான விவரங்கள், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை ஆவணங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் போது சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு எந்த அளவுக்கு அத்துமீறியிருக்கிறது; கருத்துக் கேட்புக் கூட்டங்களில் வெளியூர் ஆட்களை அழைத்து வந்து நிலம் கையகப்படுத்துவதற்கு ஆதரவாக கருத்துக் கூற வைத்தது உள்ளிட்ட மோசடிகள் அம்பலமாகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது.
சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துடிக்கிறது. செய்யாறு நகரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அரசுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கும் போதிலும் உழவர்களின் நிலங்களை பறிப்பதில் தான் தீவிரமாக இருக்கிறது. அதற்காக பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. தமிழக அரசின் செயலால் செய்யாறு பகுதியைச் சேர்ந்த மக்கள் கொந்தளித்துக் கிடக்கின்றனர்.
மக்களின் உணர்வுகளையும் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu