anbumani ramadoss latest news பா.ம.க. தலைவராகிறார் அன்புமணி ராமதாஸ்..!
anbumani ramadoss latest news-பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அடுத்த தலைவராக பதவியேற்க தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
இன்று சென்னையில் பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது கடந்த 25 ஆண்டுகளாக கட்சியின் தலைவர் பதவியை வகித்து வரும் ஜி.கே.மணி, அன்புமணிக்கு இடம் கொடுத்து ஒதுங்குவார் என்று கூறப்படுகிறது. ஜி.கே. மணிக்கு பா.ம.க.வில் புதிய பதவி வழங்கப்படும் என்றும் விபரம் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு ஏற்கனவே ஒரு சந்திப்பில் கூறுகையில், "28அன்று நடக்கும் கூட்டம் ஒரு சிறப்பு பொதுக்குழு கூட்டம் என்று மட்டுமே என்னால் கூற முடியும். இருப்பினும், அன்புமணியின் பதவி உயர்வு குறித்த அறிவிப்பு, மே 28ம் தேதி அன்று வெளியாகும்.பொதுக்குழு கூட்டத்தில், சிறப்பு தீர்மானமாக, அறிவிப்பு வெளியிடப்படும்,'' என்றார். ஆனால் இதுகுறித்து கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அன்புமணி ராமதாஸை தலைவர் பதவிக்கு கொண்டுவருவது குறித்து கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாமக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், ஜி.கே. மணியை மாற்றுவதற்கு தலைவர் ராமதாஸ் தயக்கம் காட்டியதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். வன்னியர் சங்க காலத்தில் இருந்து மூன்று தசாப்தங்களாக அய்யாவின் (ராமதாஸ்) நம்பிக்கைக்குரிய லெப்டினன்டாக மணி இருக்கிறார். அதனால் அவரை மாற்றிவிட்டு அன்புமணிக்கு பதவி வழங்க மிகவும் யோசிக்கிறார் என்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
தவிர, அனைத்து கட்சிகளிலும் உள்ள மூத்த நிர்வாகிகளுடன் நல்லுறவு கொண்டுள்ள மணி, சீட் பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுகளில் முக்கிய இடம் வகிப்பவராக இருந்தார். அதனால் அய்யா தயங்கினார்,'' என்றார் கட்சி நிர்வாகி ஒருவர். அன்புமணியும் ஆரம்பத்தில் பதவியில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பின்னர் கட்சியில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற ஆழமான சிந்தனை எழுந்தது. மேலும் அவர் பதவி ஏற்றவுடன் கட்சிக்குள் ஒரு புதிய சக்தியை கொண்டுவரமுடியும் என்று தொண்டர்களும் நம்பினர். கடந்த சில மாதங்களாக அன்புமணி அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி, 'பா.ம.க. 2. 0' உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தி வந்தார்.
இறுதியில், கட்சியில் மாற்றம் வருவது நல்லதே என்று கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், அன்புமணியை தலைவராக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் ஜி.கே.மணிக்கு உரிய அங்கீகாரம் மற்றும் அவரது அந்தஸ்துக்கு ஏற்ற புதிய பதவியை வழங்க விரும்புவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கட்சியின் தலைவராக 25 ஆண்டுகள் இருந்துள்ள ஜி.கே.மணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பதவி வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்களும் காத்திருக்கின்றனர். பா.ம.க வுக்கு புது ரத்தம் பாய்ச்சப்படுகிறது. தலைவராகிறார் அன்புமணி ராமதாஸ். பா.ம.க புதிய பாதையில் பயணிக்கும் என்று நாமும் வாழ்த்துவோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu