தனித்து விடப்பட்டதா அதிமுக? பாஜக வெளியேறியதால் சிக்கல் யாருக்கு?

ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கி தவிக்கும் அ.தி.மு.க., தற்போதைய உள்ளாட்சி தேர்தல் களத்தில் முற்றிலும் தனித்து விடப்பட்டுள்ளதால், அக்கட்சிக்கு பெரும் சிக்கல் உருவாகி உள்ளது.
அ.தி.மு.க., இரண்டாக உடைந்து அ.ம.மு.க., உதயமானது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.,வும் வெளியேறியது. இதன் விளைவாக பல சட்டசபை தொகுதிகளை அ.தி.மு.க., இழந்தது. இந்நிலையில், பா.ம.க.,வும் அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறியது. இன்று பா.ஜ.,வும் வெளியே வந்து விட்டது. பா.ஜ., வெளியே வந்ததால் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா என்பது இங்கு முக்கிய விவாதம் இல்லை.
ஆனால், பா.ஜ.,விற்கு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் நல்ல ஓட்டு வங்கி உள்ளது. தவிர தமிழகம் முழுவதும் நல்ல கட்சி உள்கட்டமைப்பு உள்ளது. பா.ஜ.,வில் இருப்பவர்கள் அனைவரும் தேர்தல் களத்தில் சளைக்காமல் பணிபுரியக்கூடியவர்கள். இப்படி தனக்கு துணையாக வேலை செய்யும் மிகப்பெரிய அணிகளை எல்லாம் இழந்த அ.தி.மு.க., நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்கிறது.
இதனால், கூட்டணி கட்சிகளை விடவும் அ.தி.மு.க.,விற்கே பலத்த பின்னடைவு ஏற்படும். தவிர பல மாவட்டங்களில் அ.தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள் தேர்தலுக்கு செலவு செய்கையில் பணம் இல்லை என கை விரித்து விட்டனர். கட்சி பணம் தர மறுத்தால் நாங்கள் போட்டியிட போவதில்லை என பல மாவட்டங்களில் முக்கியமான அ.தி.மு.க., தலைவர்களே கூறி வருகின்றனர். இப்படி பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் அ.தி.மு.க., ஆட்சி அதிகாரம், மிக வலுவான கூட்டணி, கட்சி உட்கட்டமைப்பு, திறன் மிகுந்த தேர்தல் பணிபுரியும் நிர்வாகிகள், ஐபேக் டீம், தமிழக அரசின் உளவுத்துறை, எல்லாவற்றையும் விட செல்வம், செல்வாக்கு அனைத்தையும் வைத்துக் கொண்டு இன்றைய சூழலில் மிகப்பெரும் அசுர பலத்துடன் உயரத்தில் நிற்கும் தி.மு.க.,வை தனித்து களம் காண்பது அ.தி.மு.க.,விற்கு சாத்தியமாகுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu