அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!

அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
X

வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தலை மற்றும் முகத்தை முழுவதுமாக மூடியுள்ள பெண்கள்.(கோப்பு படம்)

அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் இன்று (ஏப்.4ம் தேதி) தொடங்குகிறது.

இன்று ஏப்., 4ல் தொடங்கி இந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போதே வெயிலை தாங்க முடியவில்லை. தீயின் அருகில் இருப்பது போல் காந்தல் எடுக்கிறது. வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் பல வழிமுறைகளை முன் வைக்கிறார்கள்.

என்ன வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும்? எவற்றை உண்ண வேண்டும்? என்ற வழிகாட்டல்கள் சொல்லப்படுகிறது. இவை போக இயற்கை ஆர்வலர்கள் மரங்கள் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அனைவருமே குறிப்பிடத் தவறுகிற அல்லது மறைக்கிற ஒரு முக்கியமான விஷயம் நிலத்தடி நீர்.

முப்பது அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர் இன்று முன்னூறு அடி ஆழத்திற்கு அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. நிலத்தடி நீரை பழையபடி முப்பதடிக்கு கொண்டு வருவது எப்படி? என்பதைப் பற்றி யாருமே வாய் திறக்க மறுக்கிறார்கள்.

இந்தாண்டு மழை போதுமான அளவுக்கு பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டதுடன் எல்லா குளம், கண்மாய்களும் நிரம்பி மறுகால் பாய்ந்தது உண்மை. எப்படி பெருகி மறுகால் பாய்ந்ததோ அதே மாதிரி நான்கே மாதங்களில் கோடை வரும் முன்னே வற்றிப் போய்விட்டன. காரணம் என்ன?எல்லா நீர் நிலைகளும் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் மேடேறிப் போய்விட்டன. போதிய அளவு தண்ணீர் தேங்க ஆழம் இல்லை. பார்ப்பதற்கு நிறைந்து மறுகால் போனது மாதிரி இருந்தது. அடுத்த மழைக்காலம் வருகிற வரை தண்ணீர் இல்லை.

நிலத்தடி நீர் உயர வேண்டுமானால் மரம் வைத்தாலும், நீர்நிலைகளை பராமரிக்காவிட்டால் பிரயோஜனமில்லை. மரங்கள் மழையைக் கொண்டு வரலாம், நிலத்திற்குள் நீரை இறக்க பயன்படலாம். நிலத்தடி நீர் வேகமாக குறையாமல் தடுக்க பயன்படலாம். அந்த மழைநீரைத் தேக்கி வைக்க குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள், தெப்பங்கள், நீராவிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட வேண்டும். பெய்கிற அத்தனை மழைநீரையும் தேக்க வேண்டும். அப்போதுதான் பூமி குளிரும். நிலத்தடிநீர் மேலேறி பூமியை குளிர்விக்கும். பூமி குளிர்ந்து விட்டால் வெயிலின் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும். இவ்வளவு வெக்கை வராது.

பட்டுக்கோட்டை ஒரு பாடலிலே பாடுவான். "காவேரிக்கரை ஓரத்திலே கால் பதுங்கும் ஈரத்திலே" அதென்ன கால் பதுங்கும் ஈரம். நாம் நடந்து போனால் நம்முடைய கால் தடத்தை தண்ணீர் உடனே நிறைத்து விடும். கரிசல்காடுகளிலும் இதே மாதிரிதான். நீரூற்றுப் பிடித்து பாசம் பிடித்து கால் வைத்தால் வழுக்கி விழுகிற அளவுக்கு நீர்ப்பசை இருக்கும். கிணறுகளில் தண்ணீர் கைகளால் குனிந்து எட்டி தொடுகிற அளவுக்கு மேலேறிக் கிடக்கும். இப்போது எல்லா கிணறுகளும் வறண்டு போய் கிடக்கின்றன.

அரசு செய்ய வேண்டியது... நீர்நிலைகளை ஆழப்படுத்தி தண்ணீரைத் தேக்கினால் பூமி குளிரும். பூமிகுளிரும் போது வெயிலின் தாக்கம் தானாகவே குறையும்.

நன்றி: சாகித்ய அகாடமி எழுத்தாளர் சோ.தருமன்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!